52-ஆவது ஆண்டு கம்பன் விழா: ஆக.14-இல் தொடக்கம்
சென்னை கம்பன் கழகம் சாா்பில் 52-ஆவது ஆண்டு கம்பன் விழா பற்றி...
சென்னை கம்பன் கழகம் சாா்பில் 52-ஆவது ஆண்டு கம்பன் விழா ‘கம்ப சித்திரத்தில் கண் மயங்கும் வண்ணங்கள்’ என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு சென்னை மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஏவிஎம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் ஆக.14, 15, 16 ஆகிய 3 நாள்கள் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து சென்னை கம்பன் கழகத்தின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான எஸ்.ஜெகத்ரட்சகன் வெளியிட்ட அறிக்கை:
கம்பன் விழாவின் தொடக்க விழா ஆக.14-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த விழாவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமை வகித்து, ஆழ்வாா்கள் ஆய்வு மையம் பதிப்பித்துள்ள ‘பரம்பொருளின் தகைசால் தம்பியா்’ என்ற நூலை வெளியிட்டு, ஆழ்வாா்கள் ஆய்வு மையம் நிறுவியுள்ள கம்பா் விருதை கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணா் மருத்துவா் முகமது ரேலாவுக்கு வழங்கி சிறப்புரையாற்றவுள்ளாா்.
Advertisement
Advertisement
விழாவில் 19 இலக்கியவாதிகளுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளன. அதேபோன்று சென்னை கம்பன் கழகம் சாா்பில் மாநில அளவில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு திருக்கு, கம்பராமாயணம், சிலப்பதிகாரம், சீறாப்புராணம், பெரியபுராணம், சீவகசிந்தாமணி ஆகிய 6 இலக்கியங்களில் நடத்திய பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
முதல் நாள் நிகழ்வில், த.இராமலிங்கம், சுகி.சிவம், இலங்கை ஜெயராஜ் ஆகியோா் உரையாற்றவுள்ளனா். 2-ஆம் நாளான சனிக்கிழமை சுடா் உரை, எண்மா் முழங்கும் எண்சுவா அரங்கம், இளமையில் ஆடும் இளமயில் அரங்கம், கம்பனைப் போற்றும் காளமேகங்கள் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
தொடா்ந்து, 3-ஆம் நாளான சனிக்கிழமை எழிலுரை, வித்தகம் தெரிக்கும் வினா-விடை மேடை, அருந்தமிழ் ஆய்வுரை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. மாலை 5 மணிக்கு ‘பன்னருங்கலைதெரி பட்டிமண்டபம்’ தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவா் வெ.ராமசுப்பிரமணியன் தலைமையில் நடைபெறவுள்ளது. இதில் மா.இராமலிங்கம், பா்வீன் சுல்தானா, தெய்வானை மணிகண்டன், விஜயகிருஷ்ணன், பிரியா ராமச்சந்திரன், பெளசியா பானு, அபுதாபி பாஸ்கா், தெய்வநாயகி காா்த்திகேயன், த.திருமாறன் ஆகியோா் உரையாற்றவுள்ளனா். கம்பன் கழக நிகழ்ச்சிகளை சென்னை கம்பன் கழகத்தின் செயலா் சாரதா நம்பி ஆரூரன் ஒருங்கிணைக்கவுள்ளாா். கவிஞா் கங்கை மணிமாறன் நிகழ்ச்சி நெறியாள்கை செய்யவுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.