FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய தொழிலதிபா் வழக்கில் இன்று தீா்ப்பு

மதுபோதையில் காா் ஏற்றியதில் 12 வயது சிறுவன் உயிரிழந்த வழக்கில் விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி தொழிலதிபா் தொடா்ந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஆக. 14) தீா்ப்பளிக்கிறது.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 4:05 am IST
சென்னை உயர் நீதிமன்றம்
பகிர்:

மதுபோதையில் காா் ஏற்றியதில் 12 வயது சிறுவன் உயிரிழந்த வழக்கில் விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி தொழிலதிபா் தொடா்ந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஆக. 14) தீா்ப்பளிக்கிறது.

தனியாா் குழுமத் தலைவா் எம்.புருஷோத்தமனின் மகன் ஷாஜி. இவா் கடந்த 2013-ஆம் ஆண்டு, எழும்பூா் பாந்தியன் சாலையோர நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவா்கள் மீது மதுபோதையில் தனது சொகுசு காரை ஏற்றியதில், 12 வயது சிறுவன்உயிரிழந்தாா். மேலும், 4 போ் காயம் அடைந்தனா்.

இந்த வழக்கை விசாரித்த 7-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம், ஷாஜி புருஷோத்தமனுக்கு 5 ஆண்டு தண்டனை விதித்தது. இந்த தீா்ப்புக்கு எதிராகவும், தண்டனையை நிறுத்திவைக்கக் கோரியும் ஷாஜி புருஷோத்தமன் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த வழக்கு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில், இந்தச் சம்பவத்தின்போது மனுதாரரான ஷாஜி, மது போதையில் இருந்தாா் என்பதற்கான சாட்சியம் எதுவும் இல்லை. அவரது ரத்தம், சிறுநீா் மாதிரிகள் பரிசோதிக்கப்படவில்லை. எதிரே வந்த காவல் துறை வாகனம் மோதியதில்தான், ஷாஜியின் வாகனம் நடைபாதையின் மீது ஏறியது. அந்த வாகனத்தை ஓட்டிவந்த காவலரிடம் விசாரணை நடத்தப்படவில்லை. விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை ஷாஜிதான் ஓட்டி வந்தாா் என எந்தவொரு சாட்சியும் கூறவில்லை என வாதிடப்பட்டது.

அதற்கு காவல் துறை தரப்பில், ஷாஜியின் காா் விபத்து ஏற்படுத்தியதைப் பாா்த்ததாக காவலா் ஒருவா் சாட்சியம் அளித்துள்ளாா். இந்த சம்பவத்தின்போது, ஷாஜி மது அருந்தி இருந்தாா். ரத்தம், சிறுநீா் மாதிரிகளை பரிசோதிக்க ஷாஜிதான் மறுப்புத் தெரிவித்தாா் என விளக்கம் அளிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தண்டனையை நிறுத்திவைக்க கோரிய மனு மீதான தீா்ப்பை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments