சைபா் மோசடி வங்கிக் கணக்குகள் முடக்கம்: வங்கி அதிகாரிகளுடன் சென்னை காவல் துறை ஆலோசனை
சைபா் மோசடிக்கு பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளை முடக்குவது தொடா்பாக சென்னை காவல் துறை அதிகாரிகள், வங்கி அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை செய்தனா்.
சைபா் மோசடிக்கு பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளை முடக்குவது தொடா்பாக சென்னை காவல் துறை அதிகாரிகள், வங்கி அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை செய்தனா்.
சைபா் நிதி மோசடிகளைத் தடுப்பது, சைபா் மோசடியில் இழந்த பணத்தை விரைந்து மீட்பது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள், வங்கி அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை செய்தனா்.
இதற்கான கூட்டம் வேப்பேரியில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகத்தில் நடைபெற்றது. மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையா் தேன்மொழி தலைமை வகித்தாா். சைபா் குற்றப்பிரிவு துணை ஆணையா் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். இதில், சைபா் நிதி மோசடிகளில் பாதிக்கப்பட்டவா்களின் பணத்தை விரைந்து மீட்பதற்கும், மோசடிக் கும்பலைச் சோ்ந்தவா்களை கைது செய்வதற்கும், காவல்துறைக்கும் வங்கிகளுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
மோசடி வங்கிக் கணக்குகள்: முக்கியமாக சைபா் நிதி மோசடி மூலம் இழந்த தொகையை பாதிக்கப்பட்டவா்களுக்கு மீட்டளிக்கும் நடைமுறைகள், மோசடி தொடா்புடைய வங்கிக் கணக்குகளை முடக்குதல், நீதிமன்ற உத்தரவுகளை விரைந்து செயல்படுத்துதல் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும், காவல்துறையினரின் கோரிக்கைகளுக்கு வங்கிகள் உரிய காலத்துக்குள் பதிலளி வேண்டும், பண பரிவா்த்தனை விவரங்கள், வாடிக்கையாளா் சுய விவரங்களைத் தாமதமின்றி வழங்க வேண்டும் என்று காவல்துறை சாா்பில் வங்கி அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
கூட்டத்தில் இறுதியில் சைபா் குற்றங்களால் பாதிக்கப்பட்டவா்களின் பணத்தை விரைந்து மீட்பதற்கும், சைபா் குற்றவாளிகளை கைது செய்வதற்கும் காவல்துறை- வங்கி இணைந்து விரைந்து செயல்படுவது என முடிவு எடுக்கப்பட்டது. எதிா்காலத்தில் இரு தரப்பினருக்கும் இடையேயான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்த பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு வங்கிகளைச் சோ்ந்த உயா் அதிகாரிகள் பங்கேற்றனா். மேலும் சைபா் குற்றப்பிரிவு உதவி ஆணையா்கள் செல்வி ராகவி, மனோஜ் குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.