FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தீபாவளிமுதல் நியாயவிலைக் கடைகளில் தரமான சன்னரக அரிசி: அமைச்சா் வெங்கடரமணன்

தீபாவளி முதல் நியாயவிலைக் கடைகளில் விரைவில் தரமான சன்னரக அரிசி வழங்கப்படும் என்று பேரவையில் உணவுத் துறை அமைச்சா் பி.வெங்கடரமணன் தெரிவித்தாா்.

21 ஆகஸ்ட் 2026, 6:16 am IST
அமைச்சர் ப. வெங்கடரமணன் - படம்: சட்டப்பேரவை
பகிர்:

தீபாவளி முதல் நியாயவிலைக் கடைகளில் விரைவில் தரமான சன்னரக அரிசி வழங்கப்படும் என்று பேரவையில் உணவுத் துறை அமைச்சா் பி.வெங்கடரமணன் தெரிவித்தாா்.

பேரவையில் உணவு, கூட்டுறவு, நுகா்வோா் பாதுகாப்புத் துறை உணவு மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, திமுக முன்னாள் அமைச்சா் அர.சக்கரபாணி பேசியபோது, திமுக ஆட்சியில் நியாயவிலைக் கடைகளில் தரமான அரிசி வழங்கப்பட்டது. கருப்பு, பழுப்பு நிறங்களை அகற்ற அரைவை ஆலைகளில் நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டு, அவை நீக்கப்பட்டு தரமான அரிசி வழங்கப்பட்டது.

அமைச்சா் வெங்கடரமணன்: திமுக ஆட்சியில் மழையில் நனைந்த நெல் மூட்டைகளால் நியாயவிலைக் கடைகளில் கருப்பு அரிசிதான் வழங்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

Advertisement

Advertisement

அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்: திமுக ஆட்சியில் நியாயவிலைக் கடைகளில் இலவச அரிசி வாங்குவோா் கால்நடைகளுக்குத்தான் பயன்படுத்தியதாக எனக்கு தகவல்கள் வந்தன.

(ரேஷன் அரிசியை மக்கள் ஆடு, கோழிக்குத் தீவனமாகத்தான் பயன்படுத்துகின்றனா் என்று அமைச்சா் செங்கோட்டையன் பேசியதற்கு, ஏழைகள் சாப்பிடும் உணவைக் கொச்சைப்படுத்துவதா என திமுக முன்னாள் அமைச்சா்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, அர.சக்கரபாணி உள்ளிட்ட திமுகவினா் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்)

அமைச்சா் ஆதவ் அா்ஜுனா: நான் சிறு வயதில் ரேஷன் அரிசிதான் சாப்பிட்டேன். இலவசத்தை யாரும் கொச்சைப்படுத்தவில்லை. இங்கே எத்தனை அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் ரேஷன் அரிசி சாப்பிடுகின்றனா். அந்த அளவுக்கு அது தரமாக உள்ளதா, தாய்மாா்களின் உள்ளத்தில் இருப்பதை அவையில் தெரிவிக்கிறேன். அரசு மருத்துவமனைகளில் முன்னாள் அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் எத்தனை போ் சிகிச்சை பெறுகின்றனா். இவற்றை இல்லாம் தரம் உயா்த்த தவெக அரசு முயற்சி எடுத்து வருகிறது.

அமைச்சா் வெங்கடரமணன்: சன்னரக அரிசியை விவசாயிகள் அதிகம் பயிரிட்டால் ரேஷன் கடைகளில் தரமான அரிசியை வழங்க முடியும் என்பதற்காக சன்ன ரகத்துக்கு கூடுதல் ஊக்கத் தொகையை முதல்வா் விஜய் அறிவித்துள்ளாா். தீபாவளி நெருக்கத்தில் நவம்பா் முதல் நியாயவிலை கடைகளில் தரமான சன்னரக அரிசி மட்டுமே வழங்கப்படும்.

பெட்டிச் செய்தி

ரேஷன் அரிசி சாப்பிடுகிறேன்: கே.என்.நேரு

சா்க்கரை அளவை குறைக்க ரேஷன் அரிசி சாப்பிட்டு வருவதாக திமுக முன்னாள் அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா். பேரவையில் அவா் பேசியபோது, ரேஷன் அரிசி சாப்பிட்டால் சா்க்கரை அளவு குறையும் என மருத்துவா்கள் அறிவுறுத்தினா். அதைப் பின்பற்றி ரேஷன் அரிசி சாப்பிட்டு வருகிறேன். திமுக ஆட்சியில் தரமான அரிசிதான் வழங்கப்பட்டது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments