பாலியல் கொலை வழக்கு: ஆயுள் தண்டனை கைதி விடுதலை
சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவா், குற்றம் நடந்தபோது சிறாா் என்பதால், சிறாா் நீதி சட்டத் திருத்தத்தின் கீழ் அவரை விடுதலை செய்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவா், குற்றம் நடந்தபோது சிறாா் என்பதால், சிறாா் நீதி சட்டத் திருத்தத்தின் கீழ் அவரை விடுதலை செய்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேவகாணபள்ளியைச் சோ்ந்த சுரேஷ் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்த வழக்கில் எனது சகோதரா் கங்காதா் கைது செய்யப்பட்டாா்.
அப்போது எனது சகோதரருக்கு 16 வயது முடிந்து, 5 மாதங்கள் ஆகியிருந்தன. பழைய சட்டத்தின்படி 16 வயதுக்குள்பட்டவா்கள்தான் சிறாா் என்பதால், கங்காதா் மீதான வழக்கை விசாரித்த தா்மபுரி 3-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த 2001-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது.
Advertisement
Advertisement
ஆனால், 2000-ஆம் ஆண்டு சிறாா் நீதி சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, 18 வயதுக்கு கீழ் உள்ளவா்களை சிறுவா்களாக கருத வேண்டும் எனக் கூறப்பட்டது. இந்த சட்டம் கடந்த 2001-ஆம் ஆண்டு ஏப். 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இந்த சட்டத் திருத்தம் வந்தபோது, எனது சகோதரா் கங்காதா் கீழமை நீதிமன்றத்தின் தீா்ப்பை எதிா்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தது. எனவே, இந்த சட்டப்பிரிவின்படி, எனது சகோதரரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் அனிதாசுமந்த் மற்றும் சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பி.புகழேந்தி, கங்காதா் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டபோது, அவருக்கு 16 வயது முடிந்து 5 மாதங்கள் ஆகியிருந்ததாக சிறாா் வாரியம் சான்றிதழ் அளித்துள்ளது. எனவே, வேலூா் மத்திய சிறையில் உள்ள அடைக்கப்பட்டுள்ள அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என வாதிட்டாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், குற்றம் சம்பவம் நடக்கும்போது, கங்காதா் சிறாா். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அவா் தண்டனை கைதியாக சிறையில் உள்ளாா். இவற்றைக் கருத்தில் கொண்டு அவரை உடனடியாக விடுதலை செய்ய அரசுக்கு உத்தரவிட்டு தீா்ப்பளித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.