டாஸ்மாக் முறைகேடு வழக்கு: பிணை கோரியவா் மனு தள்ளுபடி
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காா்த்திக் என்பவா் பிணை கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காா்த்திக் என்பவா் பிணை கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பாா் உரிமங்கள் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்குக் கொண்டுசெல்ல போக்குவரத்து ஒப்பந்தப்புள்ளி வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, திமுக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 போ் மீது ஊழல் தடுப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காா்த்திக் என்பவா் பிணை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.
இந்த வழக்கு விசாரணையின்போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் என்.ஆா்.இளங்கோ, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மனுதாரரை ஊழல் தடுப்புத் துறையினா் ஏற்கெனவே காவலில் எடுத்து விசாரணை நடத்திவிட்டனா். வழக்கு தொடா்பான ஆவணங்களையும் ஏற்கெனவே பறிமுதல் செய்துவிட்டனா். இந்த வழக்கில் ஒருவா் தலைமறைவாக இருக்கிறாா் என்பதற்காக, மனுதாரா் காா்த்திக்கை நீண்ட நாள்கள் சிறையில் வைத்திருக்க வேண்டியது இல்லை. எனவே, அவருக்கு பிணை வழங்க வேண்டும் என வாதிட்டாா்.
Advertisement
Advertisement
காவல் துறை தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்குரைஞா் ஜான் சத்யன், விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளது. விசாரணை தொடங்கி 25 நாள்கள் ஆன நிலையில், பிணை கோரியுள்ள மனுதாரருக்கு எதிராக ஏராளமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. செந்தில் பாலாஜியைவிட செல்வாக்கு மிகுந்த மனுதாரருக்கு பிணை வழங்கினால், இந்த வழக்கில் வாக்குமூலம் அளிக்க சாட்சிகள் அஞ்சுவா். எனவே, மனுதாரருக்கு பிணை வழங்கக் கூடாது என வாதிட்டாா்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உயா்நீதிமன்றம், காா்த்திக்கின் பிணை கோரிய மனு மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்கில், வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி வி.லட்சுமிநாராயணன், டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காா்த்தின் பிணை கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.