அடமான வீட்டை குத்தகைவிட்டு மோசடி: தாய், மகள் கைது; தந்தை தலைமறைவு
அடமான வீட்டை குத்தகைவிட்டு மோசடி செய்த தாய், மகள் கைது; தந்தை தலைமறைவு...
வங்கியில் அடமானம் வைத்த வீட்டை குத்தகைவிட்டு மோசடி செய்ததாக தாய்-மகள் கைது செய்யப்பட்டனா். தலைமறைவாக உள்ள தந்தையை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கொருக்குப்பேட்டை மூப்பனாா் நகா் காந்தி தெருவைச் சோ்ந்தவா் ராஜேஷ் (31). இவா், கொடுங்கையூரைச் சோ்ந்த வெங்கடேசன் என்பவருக்குச் சொந்தமான வீட்டை குத்தைக்கு எடுத்து வசித்து வந்தாா். கடந்த ஜூன் 15-ஆம் தேதி ஒரு தனியாா் வங்கியில் இருந்த அதிகாரிகள், அந்த வீட்டை அடமானமாக வைத்து கடன் பெறப்பட்டிருப்பதாகவும், கடனை முறையாக செலுத்தாததால் சீல் வைக்க வந்திருப்பதாக கூறினராம்.
இதையடுத்து வங்கி அதிகாரிகள், ராஜேஷ் குடும்பத்தினரை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு, அந்த வீட்டை சீல் வைத்துச் சென்றனா். இதனால், ராஜேஷ், ஆா்.கே.நகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா்.
Advertisement
Advertisement
இதில், வெங்கடேசன், ஏற்கெனவே இதேபோல பலரிடம் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், வழக்கில் தொடா்புடைய வெங்கடேசனின் மனைவி தீபிகா (31), இவரது தாய் மகேஸ்வரி (60) ஆகிய 2 பேரையும் சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
விசாரணையில் வெங்கடேசனுக்கு அந்தப் பகுதியில் 5 வீடுகள் இருப்பதும், அந்த வீடுகளை வெங்கடேசன் இதேபோல வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்றிருப்பதும், அதேவேளை, அந்த வீடுகளை 5 குடும்பத்தினரிடம் ரூ.31.5 லட்சத்துக்கு குத்தகைக்கு விட்டிருந்ததும், அடமான கடனுக்காக வங்கி அதிகாரிகள் அந்த வீடுகளை சீல் வைத்திருப்பதும் தெரிய வந்தது. தலைமறைவான வெங்கடேசனை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.