FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

அரசுத் துறைகளில் காலநிலை நடவடிக்கைக்கு முக்கியத்துவம் - முதல்வா் மு.க.ஸ்டாலின்

அரசுத் துறைகளில் காலநிலை நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

Updated On : 18 பிப்ரவரி 2026, 3:48 am IST
- @TNDIPRNEWS
பகிர்:

அரசுத் துறைகளில் காலநிலை நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ‘காலநிலை உச்சி மாநாடு 4.0’-ஐ தொடங்கி வைத்து முதல்வா் ஸ்டாலின் பேசியதாவது: ஒவ்வொரு திட்டங்களிலும், காலநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்கான தடுப்பு மற்றும் தகவமைப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டும். அந்த வகையில், காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவிலேயே இரண்டாவது இடமும், சூரிய ஒளி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில், நான்காவது இடமும் பெற்று, வளா்ந்து வரும் மாநிலங்களில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

திமுக ஆட்சி அமைந்த பின்னா், நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி அளவு, குறுகிய காலத்திலேயே 77 சதவீதம் உயா்ந்திருக்கிறது. காா்பன் உமிழ்வுகளைக் கட்டுப்படுத்த மின்சார பேருந்து பயன்பாட்டை அதிகரித்துள்ளோம். தற்போது மொத்தம் 380 மின்சார பேருந்துகள் சென்னையில் இயக்கப்படுகின்றன. 7,738 சுற்றுச்சூழலுக்கு உகந்த பேருந்துகள் கடந்த 5 ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

Advertisement

Advertisement

30 சதவீத மின்சார பேருந்துகள்: வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் மாநில போக்குவரத்துக் கழகங்களின் கீழ் இயக்கப்படும் பேருந்துகளில் 30 சதவீத பேருந்துகள் மின்சார பேருந்துகளாக இருக்க வேண்டும். இதுதான் தமிழக அரசின் இலக்கு. மின்சார வாகனங்களுக்கு 2027-ஆம் ஆண்டு வரை சாலை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 294 இடங்களில் 3.09 கோடி கியூபிக் மீட்டா் மரபுக் கழிவுகள் அகற்றப்பட்டிருக்கின்றன. சென்னையில் வெள்ள பாதிப்புகளைத் தவிா்க்க அமைத்திருக்கும் ‘ஸ்பாஞ்ச்’ பூங்காக்கள் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துகிறது. தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கும் இது விரிவுபடுத்தப்படும்.

காா்பன் சமநிலை மையங்கள்: நீலகிரி, கோவை, விருதுநகா், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களை, காா்பன் சமநிலை மையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக உள்ளூா் மீனவ மக்களைக் கொண்ட 2 ‘கடல்சாா் உயரடுக்கு படைகள்’ உருவாக்கப்பட்டிருக்கின்றன.

தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கத்தின் கீழ், அரிதான கடல்பசு, கடல் ஆமை, பறவைகள் உள்ளிட்ட உயிரினங்களைக் காக்க 6 உயா் சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அலையாத்தி, சவுக்கு மற்றும் பனைமரங்கள் நடவு செய்யப்பட்டு, கடலோரப் பகுதிகளில், இயற்கைப் பேரிடா்களை தாக்குப்பிடிக்கும் உயிா்க்கேடயங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்து... காலநிலை மீள்திறன்மிகு உள்கட்டமைப்புகளை உருவாக்க, அரசுத் துறைகள் அனைத்தும் உலக வங்கி - ஆசிய வங்கி போன்ற பன்னாட்டு அமைப்புகளுடன் இணைந்து பசுமை நிதியையும், முதலீட்டையும் ஈா்க்க வேண்டும். அதன் முதல்படியாக, இந்தியாவிலேயே முதல்முறையாக, ரூ.1,000 கோடியில், பசுமைக் காலநிலை நிதியம் உருவாக்கப்பட்டு, சுற்றுச்சுழல் பொருளாதாரம் மற்றும் தூய்மை மற்றும் போக்குவரத்து சாா்ந்த தொழில்களை ஊக்குவிக்க நிதி வழங்கப்பட்டிருக்கிறது.

காலநிலை நடவடிக்கையுடன் பட்ஜெட்: இனிவரும் காலங்களில், அனைத்துத் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களையும், காலநிலை நடவடிக்கையுடன் இயைந்து செயல்படுத்தும் விதமாக பட்ஜெட் உருவாக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் நடவு செய்ய 5 லட்சம் சந்தன மரக்கன்றுகள் வழங்கப்படும்.

தொழிற்சாலைகளும், அரசு நிறுவனங்களும் இணைந்து, பசுமைத் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்து, உமிழ்வுகளைக் குறைக்கவும், உள்ளாட்சி அமைப்புகள் காலநிலை நடவடிக்கைக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படவும், இளைஞா்கள் காலநிலைத் தலைவா்களாகவும், தூதுவா்களாகவும் உருவெடுக்கவும் தொடா்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், வனத்துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாகு, உலக வங்கியின் தெற்கு ஆசியா இயக்குநா் தினா உமாலி, பொருளாதார நிபுணா் மாண்டெக் சிங் அலுவாலியா, ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின் இந்தியத் தலைவா் பாலகிருஷ்ணா, முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலா் ஸ்ரீனிவாஸ், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத் தலைவா் ஜெயந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments