ஜன. 7 முதல் பிராட்வே பேருந்து நிலையம் மூடல்! ராயபுரம், தீவுத்திடலில் இருந்து இயக்கம்!
ராயபுரம், தீவுத்திடலில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளது தொடர்பாக....
பிராட்வே பேருந்து முனையம் மறுசீரமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெற இருப்பதால், ஜனவரி 7 ஆம் தேதி முதல் பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்படும் என்று சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
சென்னையின் மிகப் பழைமையான பேருந்து நிலையமாக பிராட்வே பேருந்து நிலையம் இருந்துவருகிறது. தொடக்கத்தில் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்கள் தொடங்கி பல்வேறு பகுதிகளுக்கும் இங்கிருந்துதான் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.
2002-ஆம் ஆண்டுக்குப் பிறகு, போக்குவரத்து நெரிசல், இடப்பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களால் பிராட்வேயிலிருந்து தென்மாவட்டங்கள் உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பேருந்து சேவைகள், அப்போது புதிதாக கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டன.
Advertisement
Advertisement
தற்போது கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, பிராட்வே பேருந்து நிலையத்தில் பெரும்பாலும் மாநகரப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி, தாம்பரம், கிளாம்பாக்கம் என சென்னை மாநகருக்குள்ளாகவே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பிராட்வே பேருந்து நிலையத்தை நவீன முறையில் மேம்படுத்தவேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தன நிலையில், இப்பேருந்து நிலையம் சுமார் ரூ. 822 கோடியில் 10 அடுக்குகள் கொண்ட கட்டடமாக அமைக்கப்படவுள்ளது.
மேலும், பயணிகள் வசதிக்காக அங்கிருந்து மெட்ரோ ரயில் நிலையம், புறநகர் மின்சார ரயில் நிலையம் உள்ளிட்டவற்றை இணைக்கும் வகையில் சுரங்க நடைபாதைகள் மற்றும் நடை மேம்பாலங்களும் அமைக்கப்பட உள்ளன.
பிராட்வே பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், ஜனவரி 7 ஆம் தேதி முதல் பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் ராயபுரம் மற்றும் தீவுத்திடலில் இருந்து இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Buses will be operated from Royapuram, Island Grounds.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.