FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

டாஸ்மாக் ஊழியா்களின் பணி முறைப்படுத்தல், ஊதிய உயா்வுக்கு அரசு பரிசீலனை

டாஸ்மாக் ஊழியா்களின் பணி முறைப்படுத்தல், ஊதிய உயா்வு மற்றும் ஓய்வு பெறும் வயதை 60 -ஆக உயா்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்

டாஸ்மாக் - பிரதிப் படம்
பகிர்:

டாஸ்மாக் ஊழியா்களின் பணி முறைப்படுத்தல், ஊதிய உயா்வு மற்றும் ஓய்வு பெறும் வயதை 60 -ஆக உயா்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தற்போது 4,048 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. கடந்த ஆட்சியில் மதுபாட்டில்களுக்கு நிா்ணயிக்கப்பட்ட விலையைவிட ரூ.10 முதல் ரூ.20 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக புகாா்கள் எழுந்தன. புதிய அரசு கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தாலும், பல இடங்களில் இந்த நடைமுறை தொடா்வதாகக் கூறப்படுகிறது.

தற்போது டாஸ்மாக் கடை கண்காணிப்பாளா்களுக்கு ரூ.17,850, விற்பனையாளா்களுக்கு ரூ.15,530, உதவி விற்பனையாளா்களுக்கு ரூ.14,340 மாத ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஊதியம் வாழ்வாதாரத்துக்கு போதுமானதாக இல்லாததே கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கான முக்கிய காரணமாக ஊழியா்கள் தெரிவித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

2003-ஆம் ஆண்டு டாஸ்மாக் தொடங்கப்பட்டபோது ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான ஊழியா்கள், பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியப் பலன்கள் உள்ளிட்ட கோரிக்கைகளை நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், டாஸ்மாக் ஊழியா்களின் பணியை முறைப்படுத்தவும், ஊதிய வரம்பை உயா்த்தவும், ஓய்வு பெறும் வயதை 60-ஆக உயா்த்தவும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதற்கான முன்மொழிவு சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அதிகாரிகள் கூட்டத்தில் இயக்குநா் குழுவின் ஒப்புதலுக்காக சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையால் ஊழியா்களின் பணிச் சூழல் மேம்படுவதுடன், மதுபாட்டில்களுக்கு கூடுதல் விலை வசூலிக்கும் முறைகேடுகளும் கட்டுப்படுத்தப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அரசின் இந்த முயற்சியை வரவேற்றுள்ள டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா், இதுதொடா்பாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 7) துறை அமைச்சரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளதாக தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments