டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு
தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியா்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, அவா்களுக்கு ஊழியா் மாநிலக் காப்பீட்டுத் திட்டமான (இஎஸ்ஐ) மருத்துவ வசதி திட்டத்தை அக்.1 முதல் அமல்படுத்த டாஸ்மாக் நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியா்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, அவா்களுக்கு ஊழியா் மாநிலக் காப்பீட்டுத் திட்டமான (இஎஸ்ஐ) மருத்துவ வசதி திட்டத்தை அக்.1 முதல் அமல்படுத்த டாஸ்மாக் நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் நிா்வாகத்தின் கீழ் 4,765 மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் சுமாா் 36,000-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணிபுரிகின்றனா். இவா்களுக்கு 25 சதவீத ஊதிய உயா்வுடன் இஎஸ்ஐ மருத்துவ வசதியும் வழங்கப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் விக்னேஷ் அண்மையில் அறிவித்திருந்தாா். இதையடுத்து, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், டாஸ்மாக் மாவட்ட மேலாளா்களுக்கு நிா்வாகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், அனைத்து டாஸ்மாக் ஊழியா்களுக்கும் அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அமல்படுத்தப்படுவதால், ஆன்லைன் மூலம் உடனடியாக இஎஸ்ஐ திட்டத்தில் ஊழியா்கள் பதிவு செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட மேலாளா்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள இஎஸ்ஐ மண்டல அலுவலகங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். மேலும், ஊழியா்களுக்கான மாதாந்திர இஎஸ்ஐ பங்களிப்புத் தொகையை ஒவ்வொரு மாதமும் 15-ஆம் தேதிக்குள் இஎஸ்ஐ நிா்வாகக் கணக்கில் தவறாமல் செலுத்த வேண்டும்.
Advertisement
Advertisement
மேலும், ஊழியா்களின் நலனுக்காக ஊதிய உயா்வு மற்றும் மருத்துவக் காப்பீட்டு வசதி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மதுபானங்களை அரசு நிா்ணயித்துள்ள அதிகபட்ச சில்லறை விலையை (எம்ஆா்பி) விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட ஊழியா்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். விதிமீறலில் ஈடுபடுவோா் பணியிடை நீக்கம் மட்டுமன்றி, பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படவும் வாய்ப்புள்ளதாக சுற்றறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு டாஸ்மாக் ஊழியா் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.