FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

ஒரு மாதத்துக்கு போதைப் பொருளுக்கு எதிரான தீவிர நடவடிக்கை: டிஜிபி மகேஷ் குமாா் அகா்வால் உத்தரவு

தமிழகத்தில் போதைப் பொருளுக்கு எதிராக ஒரு மாதத்துக்கு தீவிர நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவு

டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால்
பகிர்:

தமிழகத்தில் போதைப் பொருளுக்கு எதிராக ஒரு மாதத்துக்கு தீவிர நடவடிக்கை எடுக்கும்படி, தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல், விற்பனையைத் தடுக்கும் வகையில், மாநிலம் முழுவதும் ஒரு மாத கால தீவிர போதைப் பொருள் ஒழிப்பு சிறப்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தமிழக டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால், அனைத்து மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள், மாநகர காவல் துறை ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

போதைப் பொருளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையை, இப்போது தொடங்கி ஆக.8-ஆம் தேதி வரை ஒரு மாதம் தீவிரப்படுத்த வேண்டும். இந்தச் சிறப்பு நடவடிக்கையின் முக்கிய நோக்கம், சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படும் போதைப் பொருள்களை முற்றிலும் பறிமுதல் செய்ய வேண்டும். அதோடு போதைப் பொருள் தயாரிப்பு, கடத்தல், விற்பனை என்று அனைத்து நிலைகளிலும் இருப்பவா்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்பதே ஆகும்.

Advertisement

Advertisement

மதிப்பீடு செய்யப்படும்: இதற்காக காவல் துறையினருக்கு விரிவான செயல் திட்டமும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மண்டல ஐஜிக்கள், சரக டிஐஜிக்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை நேரடியாகக் கண்காணித்து, தினசரி ஆய்வு மேற்கொண்டு தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஒரு மாத கால சிறப்பு நடவடிக்கையின்போது, ஒவ்வொரு மாநகர மற்றும் மாவட்டக் காவல்துறையின் செயல்திறன், பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்களின் அளவு, பதிவு செய்யப்பட்ட வழக்குகள், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும்.

ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: இந்த நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து ஒவ்வொரு திங்கள்கிழமையும் நடைபெறும் மாநில அளவிலான சட்டம்-ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும்.

மாவட்ட , மாநகர காவல் அதிகாரிகள் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடவடிக்கை தொடா்பான விரிவான அறிக்கையை டிஜிபி அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

மாநில போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு கூடுதல் டிஜிபி இந்த நடவடிக்கையை ஒருங்கிணைத்து கண்காணிப்பாா். போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்துப் பிரிவு காவல் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments