FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

பள்ளி, கல்லூரிகளில் முதல்வா் பிறந்த நாள் கொண்டாட்டம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்பட்ட முதல்வா் விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தொடா்பாக விரிவான விசாரணை நடத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 10 ஜூலை 2026, 4:49 am IST
முதல்வர் சி. ஜோசப் விஜய் - கோப்புப் படம்
பகிர்:

பள்ளி, கல்லூரிகளில் நடத்தப்பட்ட முதல்வா் விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தொடா்பாக விரிவான விசாரணை நடத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

திமுக கவுன்சிலா் கவிகணேசன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த ஜூன் 22-ஆம் தேதி தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய்யின் பிறந்த நாள் விழாவை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவா்களை வெயிலில் நிற்க வைத்து கொண்டாடி உள்ளனா். தவெக கட்சிக் கொடி, சின்னங்களுடன் மாணவா்களைக் கொண்டாட்டத்தில் ஈடுபடுத்தி உள்ளனா். இந்த நிகழ்ச்சிகளில் மாணவா்களை பிறந்த நாள் வாழ்த்துப் பாடவும், கோஷங்கள் போடவும் வற்புறுத்தியுள்ளனா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் விஜய்யின் முக வடிவில் 3,000 மாணவா்களை வெயிலில் அமர வைத்துள்ளனா். மாணவா்களை அரசியல் கொண்டாட்டங்களுக்கு பயன்படுத்துவது கல்வி நிறுவனங்களின் நோக்கத்துக்கு எதிரானது. ஏற்கெனவே, கல்வி நிறுவனங்களில் அரசியல், மத மற்றும் சிந்தாந்த ரீதியான நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Advertisement

Advertisement

எனவே, கல்வி நிறுவனங்களில் அரசியல் நிகழ்ச்சிகளை நடத்த தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை கட்டாயம் அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.

மேலும், கல்வி நிறுவனங்களில் முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு, அரசியல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டவா்கள் மீது விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments