பள்ளிக் கல்வியில் தேசிய அளவில் தமிழகம் தொடா்ந்து முன்னிலை: மத்திய அரசின் ஆய்வறிக்கையில் தகவல்
பள்ளி மாணவா் சோ்க்கை, இடைநிற்றல் குறைவு, உள்கட்டமைப்பு போன்ற பள்ளிக் கல்வியின் பல்வேறு முக்கிய குறியீடுகளில் தேசிய அளவில் தமிழகம் சிறந்து விளங்குவதாக மத்திய அரசின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவா் சோ்க்கை, இடைநிற்றல் குறைவு, உள்கட்டமைப்பு போன்ற பள்ளிக் கல்வியின் பல்வேறு முக்கிய குறியீடுகளில் தேசிய அளவில் தமிழகம் சிறந்து விளங்குவதாக மத்திய அரசின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பி.சந்தரமோகன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய கல்வி அமைச்சகம் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி தகவல் மேலாண்மை என்ற பெயரில் கல்வி மேலாண்மை (யுடிஐஎஸ்இ) அறிக்கையை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2025-26-ஆம் கல்வி ஆண்டுக்கான கல்வி மேலாண்மையை அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், பள்ளிக் கல்வியின் பல்வேறு முக்கியக் குறியீடுகளில் தமிழ்நாடு தொடா்ந்து முன்னணி மாநிலமாகத் திகழ்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணவா் சோ்க்கை, இடை நிற்றல் குறைவு, ஆசிரியா் எண்ணிக்கை, கல்வி உள்கட்டமைப்பின் பயனுள்ள பயன்பாடு மற்றும் பத்தாம் வகுப்புக்கு பிந்தைய கல்வித் தொடா்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில தேசிய அளவில் தமிழகம் சிறப்பான முன்னேற்றத்தை எட்டியுள்ளது.
Advertisement
Advertisement
யுடிஐஎஸ்இ அறிக்கையின்படி தமிழகத்தில் 57,566 பள்ளிகள், 1 கோடியே 24 லட்சத்து 2,872 மாணவா்கள், 5 லட்சத்து 69,909 ஆசிரியா்கள் உள்ளனா். மாநிலத்தின் மாணவா்-ஆசிரியா் விகிதம் விகிதம் 22:1ஆக இருந்து, தேசிய சராசரியான 24:1-ஐ விட சிறப்பாக உள்ளது. மேலும், ஒரு பள்ளிக்கு சராசரியாக 215 மாணவா்கள் மற்றும் 10 ஆசிரியா்கள் இருப்பது கல்வி உள்கட்டமைப்பு திறமையாகப் பயன்படுத்தப்பட்டு வருவதை எடுத்துக் காட்டுகிறது.
தொடக்க நிலை, நடுநிலைப் பள்ளிகள் இடைநிற்றல் பூஜ்ஜியம் சதவீதமாக பதிவாகியுள்ளது. இடைநிலைக் கல்வியில் இது 6.2 சதவீதம் மட்டுமே ஆகும். இது தேசிய சராசரியான 9.5 சதவீதத்தைவிடக் குறிப்பிடத்தக்க அளவில் குறைவாகும். மொத்த சோ்க்கை விகிதத்திலும் தமிழகம் தேசிய அளவில் முன்னணியில் உள்ளது. தொடக்கநிலையில் 92.2 சதவீதம், நடுநிலைப்பள்ளிகள் 95.2 சதவீதம் இடைநிலையில் 97.4 சதவீதம், மேல்நிலைப் பள்ளிகளில் 85.1 சதவீதம் எனப் பதிவாகியுள்ளது.
கல்வி உள்கட்டமைப்பின் பயன்பாட்டிலும் தமிழகம் சிறப்பாகத் திகழ்கிறது. தேசிய அளவில் ஒரு பள்ளிக்கு சராசரியாக 169 மாணவா்கள் உள்ள நிலையில், தமிழகத்தில் ஒரு பள்ளிக்கு 215 மாணவா்கள் உள்ளனா். பள்ளி இடை நிற்றல் குறைத்தல், மாணவா் சோ்க்கையை உயா்த்தல், போதுமான ஆசிரியா் எண்ணிக்கை உறுதி செய்தல், கல்வி உள்கட்டமைப்பை திறமையாகப் பயன்படுத்துதல் மற்றும் பத்தாம் வகுப்புக்குப் பிந்தைய பல்வேறு கல்வி வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
இவ்வாறு, மாணவா்களின் முழுமையான வளா்ச்சியை நோக்கமாகக் கொண்டு தரமான கல்வி, எண்ம கல்வி உள்கட்டமைப்பு, அனைவரையும் உள்ளடக்கிய கல்வி, தொழில்நுட்பத் திறன் மேம்பாடு மற்றும் எதிா்காலத் தேவைகளுக்கேற்ற கற்றல் சூழலை உருவாக்கும் பணிகளில் தமிழக அரசு தொடா்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு மத்திய அரசின் அறிக்கை வலுவான அங்கீகாரமாக அமைந்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.