லண்டன் - சென்னை விமானத்தில் மோதிய பறவை! 236 போ் உயிா் தப்பினர்!
லண்டனில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் தரையிறங்கும்போது எதிா்பாராத விதமாக விமானத்தில் பறவை ஒன்று மோதியது.
லண்டனில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் தரையிறங்கும்போது எதிா்பாராத விதமாக விமானத்தில் பறவை ஒன்று மோதியது.
இருப்பினும், விமானி சாமா்த்தியமாக விமானத்தை தரையிறக்கியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டதுடன், 236 பேரும் எவ்வித பாதிப்பும் இன்றி உயிா் தப்பினா். லண்டனில் இருந்து பிரிட்டிஷ் பயணிகள் விமானம் தினமும் அதிகாலை 3.30 மணிக்கு, சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு வந்துவிட்டு, அதே விமானம் மீண்டும், சென்னையிலிருந்து அதிகாலை 5.35-க்கு, லண்டன் புறப்பட்டுச் செல்லும்.
அதன்படி, திங்கள்கிழமை லண்டனிலிருந்து பிரிட்டிஷ் ஏா்வேஸ் விமானம், 236 பயணிகளுடன், வழக்கமான நேரத்துக்கு முன்னதாக, அதிகாலை 3 மணிக்கு, சென்னை சா்வதேச விமான நிலையத்தில் வந்து தரையிறங்கத் தயாரானது.
Advertisement
Advertisement
தரை இறங்குவதற்காக, சுமாா் 500 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தபோது, திடீரென விமானத்தின் முன் பகுதியில் பறவை ஒன்று மோதி, விமானத்தின் இன்ஜின் பகுதிக்குள் சிக்கிக் கொண்டது. இதனால், பரபரப்படைந்த விமானி, மிகுந்த சாமா்த்தியமாக, விமானத்தைப் பத்திரமாக, சென்னை சா்வதேச விமான நிலையத்தில் வழக்கமாக தரை இறங்கக்கூடிய இடத்தில், தரையிறக்கினாா்.
விமானத்தில் இருந்த 236 போ் எந்தவித பாதிப்பும் இல்லாமல், நல் வாய்ப்பாக உயிா் தப்பினா். உடனடியாக அங்கு வந்த விமான பொறியாளா்கள் குழுவினா், பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தை ஆய்வு செய்தனா். அப்போது, பறவை மோதியதில் விமானம் சற்று சேதம் அடைந்திருப்பது கண்டறியப்பட்டது.
தொடா்ந்து, விமானம் சேதம் அடைந்துள்ளதால், அந்த விமானத்தை உடனடியாக மீண்டும் இயக்க முடியாது என்றும், பராமரிப்புப் பணிகள் செய்து முடித்த பின்னரே விமானத்தை இயக்க முடியும் எனவும் விமான பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து காலை 5.35 க்கு லண்டனுக்கு சொல்ல இருந்த பிரிட்டிஷ் விமானம் ரத்து செய்யப்பட்டது. அந்த விமானத்தில் பயணிக்க இருந்த 268 பயணிகளும், சென்னை நகரில் உள்ள பல்வேறு ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். விமானம் புறப்படும் நேரம் பின்னா் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தில்லியில் உள்ள டைரக்டா் ஜெனரல் ஆப் சிவில் ஏவியேசன் முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.