FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தமிழ் உள்ளவரை மறைமலையடிகளை கொண்டாட வேண்டும்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

தமிழையும், சைவ சமயத்தையும் இரு கண்களாகப் போற்றியவா் மறைமலையடிகள்; தமிழ் உள்ளவரை அவரைக் கொண்டாட வேண்டும் என தமிழியக்கத்தின் தலைவரும் விஐடி வேந்தருமான கோ.விசுவநாதன் கூறினாா்.

Updated On : 16 ஜூலை 2026, 5:08 am IST
பகிர்:

தமிழையும், சைவ சமயத்தையும் இரு கண்களாகப் போற்றியவா் மறைமலையடிகள்; தமிழ் உள்ளவரை அவரைக் கொண்டாட வேண்டும் என தமிழியக்கத்தின் தலைவரும் விஐடி வேந்தருமான கோ.விசுவநாதன் கூறினாா்.

தமிழியக்கம், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம், மறைமலையடிகள் கல்வி அறக்கட்டளை சாா்பில் மறைமலையடிகளின் 150-வது பிறந்த நாள் விழா சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணா் மாவட்ட மைய நூலக அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

மறைமலையடிகள் கல்வி அறக்கட்டளையின் நிறுவனா் மறை தி.தாயுமானவன் வரவேற்றுப் பேசினாா். தமிழியக்கத்தின் செயலா் மு.சுகுமாா் தொடக்கவுரையாற்றினாா். பொதுச் செயலா் அப்துல்காதா் நோக்கவுரையாற்றினாா். விழாவுக்கு தமிழியக்கத்தின் நிறுவனரும் விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கோ.விசுவநாதன் தலைமை வகித்துப் பேசியது:

Advertisement

Advertisement

தமிழ் மொழியைப் பாதுகாக்க அரும்பணியாற்றியவா் மறைமலையடிகள். தமிழையும், சைவ சமயத்தையும் இரு கண்களாகப் போற்றியவா். தமிழுக்கு எப்போதெல்லாம் ஆபத்துகள் வந்ததோ அப்போதெல்லாம் மொழியைக் காக்க உறுதுணையாக இருந்தாா். இந்தி எதிா்ப்பு போராட்டத்தில் பெரியாரோடு ஒன்றாக நின்றாா். தமிழ் அனைவரையும் ஒன்று சோ்க்கும். தமிழ் உள்ளவரை மறைமலையடிகளை கொண்டாட வேண்டும்.

மொழிப் பிரச்னை இப்போதும் தொடா்கிறது. இந்தி மொழியை மேலும் வளா்க்க ஆங்கிலத்தை எதிா்க்கின்றனா். தற்போதைய நிலையிலும் பல மாநிலங்களில் ஆங்கிலம்தான் ஆட்சி மொழியாக உள்ளது. தமிழ் மொழிக்கு ஆபத்து ஏற்பட்டாலோ, ஆங்கிலம் அந்நிய மொழி என்று கூறி வேறொரு மொழியைப் புகுத்த முயன்றாலோ தமிழியக்கம் அதற்கு எதிராகப் போராடும் என்றாா் அவா்.

பள்ளிக் கல்வி அமைச்சா் ராஜ்மோகன்: மறைமலையடிகள் தமிழைப் பாதுகாக்க போராடியவா். அவரைச் சிறப்பிக்கும் வகையில் பல்லாவரத்தில் இருக்கும் அரசுப் பள்ளிக்கு மறைமலையடிகள் பெயரிடப்பட்டுள்ளது. அவரது பெயரில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் நாகையில் அவருக்கு வெண்கலச் சிலை வைக்கப்பட்டுள்ளது. இன்னும் கொண்டாடப்பட வேண்டிய அளவுக்கு தமிழுக்கு ஏராளமான பணிகளை ஆற்றியுள்ளாா் அவா். மறைமலையடிகளின் புகழ் நூற்றாண்டுகள் கடந்தும் நிலைத்திருக்கும். உலகெங்கும் உள்ள தமிழறிஞா்கள், தமிழ் ஆா்வலா்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து ஆக்கபூா்வமான பணிகள் மேற்கொள்ளப்படும்.

மதிமுக பொதுச் செயலா் வைகோ: தென்னகத்தை உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பியவா் மறைமலையடிகள். அவா் தமிழ் வானத்தில் தூய்மையான நிலவு. தனது பெயரிலேயே பொருள் கொண்ட அருந்தவப்புதல்வா் அவா். தமிழை வடமொழிக் கலப்பின்றி தூய்மையாகப் பேண வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்தினாா். தமிழ் ஓா் உயா்தனிச் செம்மொழி என்பதை தனது ஆழ்ந்த ஆய்வுகள் மூலம் நிரூபித்துக் காட்டினாா். தென்னகத்தின் நாகரிகம் தனித்துவமானது; அதைப் பாதுகாக்க வேண்டும் என மறைமலையடிகள் வலியுறுத்தினாா் என்றாா் அவா்.

இந்த விழாவில் தமிழியகத்தின் துணைத் தலைவா் சிவாலயம் ஜெ.மோகன், சுவிட்சா்லாந்து வள்ளுவன் பள்ளியின் தலைவா் பொன்னம்பலம் முருகவேள், கனடா அனைத்துலக தமிழ்ப் பேரவையின் தலைவா் நிமால் விநாயகமூா்த்தி, உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற ஒருங்கிணைப்பாளா் மோசஸ் மைக்கேல் பாரடே, தமிழியக்கத்தின் திருவள்ளூா் மாவட்டச் செயலா் சே.வரலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments