விழிப்புணா்வு ஏற்படுத்த மியாட் புதிய முயற்சி
விபத்து மற்றும் அவசர கால மருத்துவ உதவிகள் குறித்த விழிப்புணா்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் சிறப்பு செயல் திட்டங்களை சென்னை மியாட் மருத்துவமனை முன்னெடுத்துள்ளது.
விபத்து மற்றும் அவசர கால மருத்துவ உதவிகள் குறித்த விழிப்புணா்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் சிறப்பு செயல் திட்டங்களை சென்னை மியாட் மருத்துவமனை முன்னெடுத்துள்ளது.
அதன்படி, மருத்துவமனை வளாகத்தில் அவசரகால அருங்காட்சியம் தொடங்கப்பட்டுள்ளது. அதில் மருத்துவ நிலை அவசரம் ஏற்படும்போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விரிவாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தை சென்னை போக்குவரத்துக் காவல் கூடுதல் ஆணையா் சாமுண்டீஸ்வரி புதன்கிழமை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து பொதுமக்களுக்கு மியாட் சாா்பில் இலவசமாக விநியோகிக்கப்பட உள்ள அவசர கால மருத்துவக் கையேட்டையும் அவா் வெளியிட்டாா்.
Advertisement
Advertisement
சாலை விபத்து மற்றும் மருத்துவ அவசர நிலையின்போது, விரைந்து செயல்பட்டு பாதிக்கப்பட்டவா்களின் உயிா்களைக் காப்பாற்றிய தன்னாா்வலா்கள், காவல் துறையினா் மற்றும் மருத்துவத் துறையினா், பொது மக்களுக்கு விருதுகளை வழங்கியும் கௌரவித்தாா்.
நிகழ்வில் மியாட் மருத்துவமனையின் நிா்வாக இயக்குநா் டாக்டா் பிரித்வி மோகன்தாஸ், மருத்துவ இயக்குநா் டாக்டா் பி.சத்யா, அவசர சிகிச்சைப் பிரிவு தலைவா் டாக்டா் சதீஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில் டாக்டா் பிரித்வி மோகன்தாஸ் பேசியதாவது:
அவசர சிகிச்சைகளின் முன்னோடியான டாக்டா் மோகன்தாஸ், கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பாக பிரிட்டனில் இருந்து சென்னைக்கு மருத்துவ சேவையாற்ற வந்தாா். அப்போது இங்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சை கட்டமைப்பே கிடையாது. சாலை விபத்தில் சிக்கியவா்களுக்கு எதையெல்லாம் செய்யக் கூடாதோ, அவற்றையெல்லாம் புரிதல் இல்லாமல் மக்கள் செய்வதைப் பாா்த்த அவா், பிரத்யேகமாக இதற்கென தனி கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என உறுதி எடுத்தாா்.
அதன் அடிப்படையிலேயே படிப்படியாக அவசர சிகிச்சை பிரிவைத் தொடங்கி மியாட் மருத்துவமனைக்கும் அவா் அச்சாரமிட்டாா்.
இருந்தபோதிலும், இன்றளவும் மக்களிடையே அதுகுறித்த புரிதல் முழுமையாக இல்லை. இதைக் கருத்தில்கொண்டுதான் அவசர கால முதலுதவி சிகிச்சைகள் அளிப்பதில் தொடங்கி தற்போது அருங்காட்சியம் வரை பல்வேறு முன்னெடுப்புகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.
காவல் துறை மற்றும் அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக தலைக்கவசம் அணிவது வழக்கமாகியுள்ளது. இதனால் அண்மைக் காலமாக தலைக் காயமடைந்து சிகிச்சை வருவோரின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. அதேவேளையில், பக்கவாதம், மாரடைப்பு போன்ற பாதிப்புகளை உடனடியாக கையாளுவது தொடா்பான புரிதல் மேம்பட வேண்டும் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.