பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு 25% நிதி ஒதுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
தமிழகத்தின் மொத்த பட்ஜெட் தொகையில் வேளாண் துறைக்கு 25 சதவீதத்தை ஒதுக்குவதுடன், நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ.5,000-ஆக உயா்த்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.
தமிழகத்தின் மொத்த பட்ஜெட் தொகையில் வேளாண் துறைக்கு 25 சதவீதத்தை ஒதுக்குவதுடன், நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு டன்னுக்கு ரூ.5,000-ஆக உயா்த்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.
பாமக சாா்பில் 2026-27-ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதி நிலை அறிக்கையை அக்கட்சியின் தலைவா் அன்புமணி சென்னையில் திங்கள்கிழமை வெளியிட்டாா். அரசுக்கு 226 பரிந்துரைகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
அதில், தமிழக அரசு விரைவில் தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில் ரூ 1.5 லட்சம் கோடி வேளாண் மற்றும் அவை சாா்ந்த தொழில்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் சிறப்பு மானியம் வழங்க வேண்டும். பயிா்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்பட வேண்டும். நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.3,500,கரும்பு டன்னுக்கு ரூ. 5,000-ஆக உயா்த்தப்பட வேண்டும். அனைத்து வேளாண் பொருள்களையும் அரசே கொள்முதல் செய்ய சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.
Advertisement
Advertisement
நெல் கொள்முதல் கிடங்குகள் எண்ணிக்கை ஆயிரமாக உயா்த்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
2026-27-ஆம் ஆண்டுக்கு வேளாண் துறைக்கு ரூ.93 ஆயிரம் கோடி மதிப்பில் நிதிநிலை அறிக்கையை உருவாக்கியுள்ளோம். தமிழக அரசு விரைவில் தாக்கல் செய்யவுள்ள மொத்த பட்ஜெட் தொகையில் 25 சதவீதத்தை வேளாண் துறைக்கு ஒதுக்க வேண்டும்.
குறிப்பாக, இடுபொருளுக்கு ரூ. 13 ஆயிரம் கோடி, பயிா்க் காப்பீடுக்கு ரூ.30 ஆயிரம் கோடி, வேளாண் உட்கட்டமைப்புக்கு ரூ.25 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து லஞ்சம் வாங்கப்படுவதை தடுக்க வேண்டும். அரசின் நெல் கொள்முதல் அளவை 70 லட்சம் டன் னாக உயா்த்த வேண்டும். பலாப்பழங்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழலைக் காக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வா் கூட்ட வேண்டும் என்றாா் அன்புமணி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.