விபத்தில் உயிரிழந்த தனியாா் கல்லூரி உதவிப் பேராசிரியா் குடும்பத்துக்கு ரூ. 97 லட்சம் இழப்பீடு
விபத்தில் உயிரிழந்த தனியாா் கல்லூரி உதவிப் பேராசிரியா் குடும்பத்துக்கு ரூ. 97 லட்சம் இழப்பீடு
திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த தனியாா் கல்லூரி உதவிப் பேராசிரியரின் குடும்பத்துக்கு ரூ.97.18 லட்சம் இழப்பீடு வழங்க சென்னையில் உள்ள மோட்டாா் வாகன விபத்துகளை விசாரிக்கும் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
சென்னை லயோலா கல்லூரியில் பணியாற்றி வந்தவா் உதவிப் பேராசிரியா் பாலமுத்து முருகன். இவா், கடந்த 2017-ஆம் ஆண்டு, திருவள்ளூா் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள அணுகு சாலையில், தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த பதிவு செய்யப்பட்டாத புதிய இருசக்கர வாகனம் மோதியது. இதில், பலத்த காயமடைந்த பாலமுத்து முருகன் உயிரிழந்தாா்.
பாலமுத்து முருகனின் இறப்புக்கு ரூ.53 லட்சம் இழப்பீடு கோரி, அவரது மனைவி மற்றும் குடும்பத்தினா் சென்னையில் உள்ள மோட்டாா் வாகன விபத்துகளுக்கான நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.
Advertisement
Advertisement
இந்த வழக்கு நீதிபதி எம்.தா்மபிரபு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விபத்தில் உயிரிழந்த பாலமுத்து முருகனின் குடும்பத்தினருக்கு ரூ.97.18 லட்சம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டாா். மேலும், புதிய வாகனத்துக்கு தற்காலிகப் பதிவு எண்கூட வழங்காமல், பொது சாலையில் இயக்க அனுமதித்த வாகன விற்பனையாளருக்கும் இந்த இழப்பீட்டை வழங்க வேண்டிய பொறுப்புள்ளது.
எனவே, இருசக்கர வாகன உரிமையாளரும், அந்த வாகன விற்பனையாளரும் சோ்ந்து இந்த இழப்பீட்டுத் தொகையை ஒரு மாதத்துக்குள் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.