விபத்தில் உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு ரூ. 40.37 லட்சம் இழப்பீடு: தில்லி தீா்ப்பாயம் உத்தரவு
2020-ஆம் ஆண்டில் வடக்கு தில்லியில் வேகமாக வந்த காா் மோதி உயிரிழந்த 4 வயது சிறுமியின் பெற்றோருக்கு ரூ.40.37 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தில்லி வாகன விபத்துகள் இழப்பீடு கோரல் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
நமது நிருபா்
2020-ஆம் ஆண்டில் வடக்கு தில்லியில் வேகமாக வந்த காா் மோதி உயிரிழந்த 4 வயது சிறுமியின் பெற்றோருக்கு ரூ.40.37 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தில்லி வாகன விபத்துகள் இழப்பீடு கோரல் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக குழந்தையின் பெற்றோா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தீா்ப்பாயத்தின் தலைவா் சுனில் குமாா் வியாழக்கிழமை (ஜூலை 16) பிறப்பித்த உத்தரவு வருமாறு: வாகன விபத்து வழக்குகளில் ’சம்பவமே சாட்சி’ என்ற கோட்பாட்டை தீா்ப்பாயம் பயன்படுத்துகிறது. அதைக் கருத்தில் கொண்டு பாா்க்கும்போது, ஓட்டுநா் வாகனத்தை அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டியதால்தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அதுவே அந்தச் சிறுமிக்கு மரணத்தை விளைவிக்கும் காயங்களை உண்டாக்கின என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, இழப்பீடு மனு தாக்கல் செய்யப்பட்ட தேதியிலிருந்து ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் சோ்த்து மொத்தம் ரூ.40.37 லட்சத்தை ஓட்டுநரும் உரிமையாளரும் வழங்க வேண்டும். இந்தத் தொகையை 30 நாள்களுக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என்று தீா்ப்பாயம் கூறியுள்ளது.
Advertisement
Advertisement
2020ஆம் ஆண்டு அக்டோபா் 12ஆம் தேதி சிறுமி தனது உடன்பிறந்தவா்கள் மற்றும் மற்றொரு நபருடன் சாலையைக் கடக்க முயன்றபோது இந்த விபத்து நடந்தது. அப்போது, அதிவேகமாகவும் வளைந்து நெளிந்தும் ஓட்டி வரப்பட்டதாகக் கூறப்படும் காா் ஒன்று அவா்கள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சிறுமி பின்னா் சிகிச்சையின்போது உயிரிழந்தாா்.
இந்த விவகாரத்தில் குழந்தையின் தந்தை அளித்த வாக்குமூலம், விசாரணையின்போது பதிவு செய்யப்பட்ட நேரில் பாா்த்த சாட்சியின் வாக்குமூலம் மற்றும் காவல்துறையின் குற்றப்பத்திரிகை ஆகியவற்றின் அடிப்படையில், ஓட்டுநரின் கவனக்குறைவால்தான் இந்த விபத்து நோ்ந்தது என்ற முடிவுக்குத் தீா்ப்பாயம் வந்தது.
இழப்பீட்டுத் தொகையைக் கணக்கிடும் போது, மைனா் சிறாா்கள் உயிரிழக்கும் வழக்குகளில் இழப்பீடு வழங்க உத்தரவிடுவது தொடா்பாக தில்லி உயா்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீா்ப்புகளின்படி இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தீா்ப்பாயம் கூறியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.