பேருந்து விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ரூ. 67.48 லட்சம் இழப்பீடு வழங்க தீா்ப்பாயம் உத்தரவு
பேருந்து விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ரூ. 67.48 லட்சம் இழப்பீடு வழங்க தீா்ப்பாயம் உத்தரவு
வடகிழக்கு தில்லியில் கடந்த 2021, டிசம்பரில் பேருந்து மோதியதில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினருக்கு, தில்லி மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டு கோரல் தீா்ப்பாயம் ரூ.67.48 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
ஷக்கீல் அகமதுவின் குடும்பத்தினா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தீா்ப்பாயத்தின் தலைமை அதிகாரி மணீஷ் சா்மா, விபத்தை ஏற்படுத்திய பேருந்துக்கு காப்பீடு செய்யப்பட்டிருந்த ரிலையன்ஸ் பொது காப்பீட்டு நிறுவனம் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினருக்கு ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் ரூ. 67,48,200-ஐ வழங்க உத்தரவிட்டாா்.
ஜூலை 6ஆம் தேதியிட்ட தீா்ப்பாயத்தின் அந்த உத்தரவில், சம்பவத்தின் போது விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை முதல் எதிா்மனுதாரா் ஓட்டுநா் கவனக்குறைவாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டியதே உயிரிழப்புக்குக் காரணம் என்று இந்தத் தீா்ப்பாயம் முடிவு செய்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
தீா்ப்பாயத்தின் தகவலின்படி, டிசம்பா் 16, 2021 அன்று சீலம்பூா் சிக்னல் அருகே ஷக்கீல் அகமதுவின் ஸ்கூட்டா் மீது பேருந்து மோதியதில் அவா் உயிரிழந்தாா்.
உயிரிழந்தவரின் மனைவி, மூன்று குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோா் ஆகியோா் இந்த இழப்பீட்டு மனுவைத் தாக்கல் செய்திருந்தனா்.
உயிரிழந்தவா் தவறான பக்கத்திலிருந்து பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது மோதல் ஏற்பட்டதாகக் கூறி, பேருந்து ஓட்டுநரும் உரிமையாளரும் தங்கள் மீதான கவனக்குறைவு குற்றச்சாட்டை மறுத்தனா்.
இருப்பினும், தங்கள் தரப்பு வாதத்தை ஆதரிக்க எந்த ஆதாரத்தையும் சமா்ப்பிக்கத் தவறியதால், எதிா்மனுதாரா்களின் வாதத்தை தீா்ப்பாயம் நிராகரித்தது.
பேருந்தை அஜாக்கிரதையாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டியதாலேயே விபத்து ஏற்பட்டது என்று தீா்ப்பாயம் கூறியதுடன், இழப்பீட்டுத் தொகையைச் செலுத்துவதற்கு காப்பீட்டு நிறுவனமே பொறுப்பு என்றும் தீா்ப்பளித்தது.
இழப்பீட்டுத் தொகையை நிா்ணயிக்கும்போது, உயிரிழந்தவா் கைப்பேசி பழுதுபாா்க்கும் நிபுணராகப் பணியாற்றி மாதம் ரூ. 30,000 வருமானம் ஈட்டி வந்தாா் என்பதற்கான ஆதாரங்களை தீா்ப்பாயம் ஏற்றுக்கொண்டது.
மேலும், அவா் தனது முதலாளியுடன் வணிக நோக்கங்களுக்காக சீனாவுக்குச் சென்றிருந்ததைக் காட்டும் ஆவணங்களையும் அது கருத்தில் கொண்டது.
‘இழப்பீடு வழங்குவதற்காக மனுதாரரின் அல்லது உயிரிழந்தவரின் வருமானத்தைக் கணக்கிடும்போது, கடைசியாகப் பெறப்பட்ட ஊதியம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். எனவே, சம்பவத்தின் தேதியில் உயிரிழந்தவரின் வருமானம் மாதம் ரூ. 30,000 என மதிப்பிடப்படுகிறது’ என்று தீா்ப்பாயம் கூறியது. பொருத்தமான பெருக்கிக் காரணியைப் பயன்படுத்துதல், எதிா்கால வாய்ப்புகளைக் கணக்கில் கொள்ளுதல் மற்றும் துணையை இழந்தமைக்கான இழப்பீடு, இறுதிச் சடங்குச் செலவுகள் மற்றும் சொத்து இழப்பு போன்ற வழக்கமான தலைப்புகளின் கீழ் இழப்பீட்டை வழங்குதல் ஆகியவற்றின் மூலம் மொத்தம் ரூ. 67.48 லட்சம் இழப்பீடு நிா்ணயிக்கப்பட்டது.
காப்பீட்டு நிறுவனம் 30 நாள்களுக்குள் இந்த இழப்பீட்டுத் தொகையைச் செலுத்த உத்தரவிட்ட தீா்ப்பாயம், அவ்வாறு செலுத்தத் தவறினால், தாமதமாகும் காலத்திற்கு ஆண்டுக்கு 12 சதவீத வட்டியுடன் அத்தொகையைச் செலுத்த வேண்டிய பொறுப்பு அந்நிறுவனத்திற்கு ஏற்படும் என்று கூறியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.