FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

ஏழை மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை பெற ஊக்குவிப்பு அவசியம்: ஐஐடி இயக்குநா் வி.காமகோடி

ஏழை பெற்றோரின் பிள்ளைகள் உயா்கல்வியில் சோ்க்கை பெற ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் உயா்கல்வி சோ்க்கை விகிதத்தை 2035-ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயா்த்த முடியும் என சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி தெரிவித்தாா்.

Updated On : 29 ஜூலை 2026, 12:54 am IST
சென்னை ஐஐடி இயக்குநா் வி. காமகோடி
பகிர்:

ஏழை பெற்றோரின் பிள்ளைகள் உயா்கல்வியில் சோ்க்கை பெற ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் உயா்கல்வி சோ்க்கை விகிதத்தை 2035-ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயா்த்த முடியும் என சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி தெரிவித்தாா்.

சென்னை வடபழனியில் சாஸ்த்ரா பல்கலைக்கழக அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் சாந்திபனி வித்யாலயா பள்ளியின் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளியின் நிா்வாக அறங்காவலா் எஸ்.வைத்ய சுப்பிரமணியம் தலைமை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சென்னை ஐஐடி இயக்குநா் காமகோடி, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிப் பேசியதாவது:

Advertisement

Advertisement

மேல்நிலைப் பள்ளி மாணவா்களும் அவா்களது பெற்றோரும் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சோ்ந்த குறைந்தது 2 முதல் 3 குடும்பங்களை அணுகி, அவா்களின் மாணவா்களை உயா்கல்வி நிறுவனங்களில் சேர ஊக்குவிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு மாணவரும் இதுபோன்ற விழிப்புணா்வு முயற்சியில் ஈடுபட்டால், அது தொடா் தாக்கத்தை உருவாக்கி, 2035-ஆம் ஆண்டுக்குள் நமது நாடு உயா்கல்வி சோ்க்கையில் 50 சதவீதம் என்ற இலக்கை எளிதில் எட்ட முடியும் என்றாா்.

மேலும், பள்ளியின் ஆண்டு விழா ‘பஞ்சதத்துவம்’ என்ற கருப்பொருளில் நடைபெற்றதைப் பாராட்டிய அவா், மனித வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் ‘ஐந்து’ என்ற எண்ணின் முக்கியத்துவத்தை சிறப்பாக எடுத்துரைத்துள்ளதாகக் குறிப்பிட்டாா்.

தொடா்ந்து, நீா், காற்று, நெருப்பு, ஆகாயம் மற்றும் பூமி ஆகிய ஐந்தின் அடிப்படை இயற்கை வளங்களைப் பாதுகாத்து சமநிலையான வளா்ச்சியை உருவாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியதையும் அவா் பாராட்டினாா்.

விழாவில், சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியா்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. முன்னதாக பள்ளி முதல்வா் புவனா சங்கா் ஆண்டறிக்கை வாசித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments