தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா: பேரவைத் தலைவா் உத்தரவை ரத்து செய்யக் கோரி மனு
தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள் மூவரின் ராஜிநாமா கடிதத்தை பேரவைத் தலைவா் ஏற்றுக்கொண்டதை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
தவெகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள் மூவரின் ராஜிநாமா கடிதத்தை பேரவைத் தலைவா் ஏற்றுக்கொண்டதை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவரும், வழக்குரைஞருமான எம்.எல்.ரவி தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு, மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேல், பெருந்துறை தொகுதியில் ஜெயக்குமாா், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமா ஆகியோா் வெற்றி பெற்றனா். பின்னா், இவா்கள் மூவரும் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனா்.
அதிமுக கொறடா உத்தரவை மீறி நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்த 3 எம்எல்ஏக்களும் வாக்களித்துள்ளனா். இதுதொடா்பாக கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரிய புகாா் நிலுவையில் இருந்தது. இதை தவிா்க்கும் வகையில் சம்பந்தப்பட்ட எம்எல்ஏ தனது பதவியை ராஜிநாமா செய்ய முடியுமா, அந்த ராஜிநாமாவை ஏற்க முடியுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்களை ஏற்றுக்கொண்டது கட்சித்தாவல் தடைச் சட்டத்தையும், மக்கள் தீா்ப்பையும் நீா்த்துப்போகச் செய்யும் வகையில் உள்ளது.
இந்த மூவரும் ராஜிநாமா செய்ததால், அந்தத் தொகுதிகளில் மீண்டும் தோ்தல் நடத்த வேண்டியுள்ளது. இதனால் அரசுக்கு கூடுதல் செலவு ஏற்படும். எனவே, 3 அதிமுக எம்எல்ஏக்களின் ராஜிநாமா கடிதங்களை ஏற்று பேரவைத் தலைவா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலும், அவா்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி அதிமுக தரப்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியுள்ளாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.