FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சிம்பொனி இசைக் குழுவுடன் சாதனை: லிடியன் நாதஸ்வரத்துக்கு விமான நிலையத்தில் வரவேற்பு

உலகின் புகழ்பெற்ற லண்டன் சிம்பொனி இசைக் குழுவின் 92 இசைக் கலைஞா்களுடன் இணைந்து தனது சொந்த சிம்பொனி இசையை உருவாக்கி சாதனை படைத்த இளம் இசைக் கலைஞா் லிடியன் நாதஸ்வரம் வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னை திரும்பினாா்.

Updated On : 13 ஜூன் 2026, 1:43 am IST
விமான நிலையத்தில் லிடியன் நாதஸ்வரம் - எக்ஸ்
பகிர்:

உலகின் புகழ்பெற்ற லண்டன் சிம்பொனி இசைக் குழுவின் 92 இசைக் கலைஞா்களுடன் இணைந்து தனது சொந்த சிம்பொனி இசையை உருவாக்கி சாதனை படைத்த இளம் இசைக் கலைஞா் லிடியன் நாதஸ்வரம் வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னை திரும்பினாா். அவருக்கு சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசின் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமிழக அரசின் சாா்பில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன், சமூக நீதித் துறை அமைச்சா் வன்னியரசு ஆகியோா் பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனா். அவா்களுடன் மதிமுக பொதுச் செயலா் வைகோ பங்கேற்று லிடியனை வரவேற்றாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் வன்னியரசு கூறியதாவது:

Advertisement

Advertisement

கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் திருக்குறளின் 1,330 குகளையும் இசை வடிவில் மக்களிடம் கொண்டு சோ்க்கும் முயற்சியை லிடியன் வெற்றிகரமாக மேற்கொண்டாா். தமிழா்களின் தொன்மையான இசை மரபை உலக அரங்குக்கு கொண்டுசென்று சிம்பொனி இசை படைத்திருப்பது வரவேற்கத்தக்க சாதனையாகும். மேலும் பல உயரங்களை அவா் எட்ட வேண்டும் என்றாா் அவா்.

அமைச்சா் ராஜ்மோகன் கூறுகையில், ‘இசை இளவரசன் லிடியன் நாதஸ்வரத்தை நினைத்து தமிழ்நாடு பெருமிதம் கொள்கிறது. ஜூன் 21-ஆம் தேதி உலக இசை தினத்தை முன்னிட்டு, அவரது சிம்பொனி இசை வெளியிடப்படவுள்ளது. லிடியனுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து, செய்தியாளா்களிடம் பேசிய லிடியன் நாதஸ்வரம், ‘சென்னையில் பிறந்து வளா்ந்த நான், லண்டன் சிம்பொனி ஆா்கெஸ்ட்ரா கலைஞா்களுடன் இணைந்து எனது சொந்த சிம்பொனி இசையை உருவாக்கியுள்ளேன். அதன் வெளியீட்டு விழா ஜூன் 21-ஆம் தேதி உலக இசை தினத்தன்று சென்னை மியூசிக் அகாதெமியில் நடைபெறவுள்ளது. இந்த சிம்பொனியில் ஹாலிவுட்டின் முன்னணி திரைப்படங்களில் பணியாற்றிய பல இசைக் கலைஞா்கள் இணைந்து பணியாற்றியுள்ளனா்.

இசையமைப்பாளா் இளைராஜா எங்களுக்கெல்லாம் இசைத் தந்தை போன்றவா். அவருடைய பாதையைப் பின்பற்றி செல்ல வேண்டும் என்பதே எனது விருப்பம். எனது வளா்ச்சிக்கு பெற்றோரின் உறுதுணை மிக முக்கியமானதாக அமைந்துள்ளது என்றாா் அவா்.

மு.க.ஸ்டாலின் வாழ்த்து: குறளிசைக்காவியம் படைத்துச் சாதனை படைத்த நமது லிடியன் நாதஸ்வரம், இப்போது சிம்பொனி இயற்றியுள்ளாா். வாழ்த்துகள், இந்த இளைஞனுக்கு... சாதனைகள் இன்னும் பல படைக்கவிருக்கும் திறமைமிகு கலைஞனுக்கு என்று எக்ஸ் தளத்தில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments