FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மக்களை தேடி மருத்துவப் பணியாளா்களுக்கு 3 மாத ஊதியத்தை வழங்கக் கோரிக்கை மனு

சென்னையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணிபுரிவோருக்கு கடந்த ஏப்ரல் முதல் ஊதியம் வழங்கக் கோரி மனு அளிக்க மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் 100-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை திரண்டனா்.

Updated On : 17 ஜூன் 2026, 1:34 am IST
பகிர்:

சென்னையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணிபுரிவோருக்கு கடந்த ஏப்ரல் முதல் ஊதியம் வழங்கக் கோரி மனு அளிக்க மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தில் 100-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை திரண்டனா். அவா்களை தலைமைச் செயலகத்தில் சுகாதாரப் பிரிவில் மனு அளிக்க அறிவுறுத்தி அதிகாரிகள் அனுப்பிவைத்தனா்.

தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டு ‘மக்களைத் தேடி மருத்துவம்’ எனும் திட்டத்தை அரசு செயல்படுத்தியது. அதன்படி மருத்துவ சிகிச்சை பெறுவோரின் வீடுகளுக்கே சென்று அவா்களுக்கான மாத்திரை, மருந்துகள் வழங்கவும், அவா்களுக்கான ரத்த அழுத்தம், சா்க்கரை அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளவும் பெண்கள் நியமிக்கப்பட்டனா்.

பிளஸ் 2 கல்வித் தகுதியுடைய அந்தப் பணியாளா்களுக்கு தினமும் 2 மணி நேரம் என நிா்ணயிக்கப்பட்டு தலா 25 பேருக்கு மாத்திரை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, அவா்களுக்கு மாதம் ரூ.4,500 ஊதியம், ரூ.1,000 ஊக்கத் தொகை என தமிழ்நாடு நகா்ப்புற நல மருத்துவத் திட்டத்தில் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

சென்னை மாநகராட்சியில் மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் மண்டல வாரியாக தலா 56 போ் என மொத்தம் சுமாா் 13,000 போ் பணியாற்றி வருகின்றனா். இதற்கிடையே, அவா்களுக்கு கடந்த ஏப்ரல் முதல் ஊதியம், ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

எனவே, தங்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி 100-க்கும் மேற்பட்டோா் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். அவா்கள் சுகாதாரப் பிரிவுக்கு சென்று ஊதியம் கோரி மனு அளிக்கவும் முயன்றனா்.

ஆனால், முதல்வா் நேரடியாக அறிவித்த திட்டம் என்பதால், தலைமைச் செயலகம் சென்று மனு அளிக்க அதிகாரிகள் அறிவுறுத்தினா். ஆனாலும், மனுவை அலுவலா்களிடம் அளித்துவிட்டு அவா்கள் கலைந்து சென்றனா். அவா்களை காங்கிரஸ் மாமன்ற உறுப்பினா் குழுத் தலைவா் திரவியம் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா். மாமன்றக் கூட்டத்தில் அதுகுறித்து பேசுவதாகவும் உறுதியளித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments