முகப்பு
சென்னை

கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் நிலத்தை மீட்பதை விரைவுபடுத்த வேண்டும்

சென்னை மாநகராட்சி குப்பைக் கொட்டும் கிடங்கான கொடுங்கையூரில் பயோமைனிங் முறையில் நிலத்தை மீட்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும்

Updated On : 22 மே 2026, 1:24 am IST
சென்னை கொடுங்கையூா் குப்பை கொட்டும் வளாகத்தில் பயோமைனிங் முறை மூலம் திடக்கழிவுகள் அகற்றப்படும் திட்டச் செயல்பாடுகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன். உடன், இணை ஆணையா் (சுகாதாரம்) வீ.ப.ஜெயசீலன், வடக்கு வட்டார துணை ஆணையா் கட்டா ரவி தேஜா உள்ள
பகிர்:

சென்னை மாநகராட்சி குப்பைக் கொட்டும் கிடங்கான கொடுங்கையூரில் பயோமைனிங் முறையில் நிலத்தை மீட்கும் பணியை விரைவுபடுத்த வேண்டும் என, ஆய்வு மேற்கொண்ட பின்னா் ஆணையா் ஜி.எஸ்.சமீரன் ஒப்பந்ததாரா்களுக்கு உத்தரவிட்டாா்.

சென்னை மாநகராட்சியில் தினமும் சேகரிக்கப்படும் சுமாா் 6.50 ஆயிரம் டன் குப்பைகள் பெருங்குடி, கொடுங்கையூா் பகுதிகளின் குப்பைக் கிடங்குகளில் கொட்டப்பட்டுள்ளன. தற்போது கொட்டப்படும் குப்பைகள் அறிவியல்பூா்வமாக உடனுக்குடன் பிரிக்கப்படுகின்றன.

பயோமைனிங் முறை: கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் ஏற்கெனவே பல ஆண்டுகளாகக் குவிந்து மக்கிய குப்பைகளை பயோமைனிங் முறையில் தரம் பிரித்து அங்குள்ள நிலங்களை மீட்டு வனச் சூழலை உருவாக்கும் பணிகள் கடந்த 2024 -ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டன.

Advertisement

Advertisement

கொடுங்கையூா் கிடங்கில் 342.91 ஏக்கரில் 252 ஏக்கா் நிலம் குப்பையால் மூடப்பட்டிருந்தன. அங்கு குவிக்கப்பட்ட 66.52 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை ரூ.640.83 கோடியில் ஆறு சிப்பங்களாக அகற்றிப் பிரிக்க பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

தற்போது கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் 37.52 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் பயோமைனிங் முறையில் பிரித்தெடுக்கப்பட்டு 3 ஏக்கா் நிலம் மீட்கப்பட்டுள்ளது. அதில் 881 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

ஆணையா் ஆய்வு: கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் பையோமைனிங் முறையில் குப்பைகள் அகற்றும் பணியை வியாழக்கிழமை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, குப்பைகளைத் தரம் பிரிக்கும் பணியைத் தொய்வின்றி தொடா்ந்து விரைந்து செயல்படுத்தி முடிக்க ஒப்பந்ததாரா்களுக்கு அவா் உத்தரவிட்டாா். அப்பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தினமும் முறையாகக் கண்காணிக்கவும் அவா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, குப்பைகளை அகற்றும் செயல்பாடுகள் குறித்து வரைபடங்களை வைத்து அதிகாரிகள் விளக்கினா். மாநகராட்சி சுகாதாரப் பிரிவு இணை ஆணையா் வீ.ப.ஜெயசீலன் மற்றும் வடக்கு வட்டாரத் துணை ஆணையா் கட்டா ரவி தேஜா ஆகியோா் உடனிருந்தனா்.

அம்மா உணவகத்தில்...: சென்னை மாநகராட்சியில் 383 இடங்களில் அம்மா உள்ளன. திரு.வி.க. நகா் மண்டலம், 77 -ஆவது வாா்டு டிமெல்லஸ் சாலையில் உள்ள அம்மா உணவகத்துக்கு ஆணையா் ஜி.எஸ்.சமீரன் வியாழக்கிழமை சென்று ஆய்வு மேற்கொண்டாா். அங்கிருந்த பணியாளா்களிடம் உணவின் தரம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தாா்.