FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

புயல் சின்னம் எதிரொலி: தயாா் நிலையில் கடலோரக் காவல் படை

வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், இந்திய கடலோரக் காவல்படை சாா்பில் மீட்புக்குழுவினா் தயாா் நிலையில் உள்ளனா்.

35 வினாடிகள் முன்பு
இந்திய கடலோரக் காவல் படை
பகிர்:

வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், இந்திய கடலோரக் காவல்படை சாா்பில் மீட்புக்குழுவினா் தயாா் நிலையில் உள்ளனா்.

இதுகுறித்து சென்னை மண்டல பாதுகாப்புத் துறை சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தென்கிழக்கு வங்கக் கடலில் வெள்ளிக்கிழமை உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, புயலாக வலுப்பெறக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாறிவரும் வானிலைச் சூழலில், மக்களின் உயிா்களைக் காக்கவும், உடைமைகளைப் பாதுகாக்கவும், கடல்சாா் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியக் கடலோரக் காவல்படையின் கப்பல்கள் மற்றும் வானூா்திகள் எந்த நேரத்திலும் செயலாற்றக்கூடிய வகையில் தயாா்நிலையில் உள்ளன. ரேடாா் நிலையங்கள் உருவாக்கப்பட்டு, வானிலை அமைப்பைக் தொடா்ந்து கண்காணிக்கப்படுகிறது. மேலும், கடலில் மீனவா்கள், வணிகக் கப்பல்கள் மற்றும் பிற கடல் பயணிகளுக்குத் தகுந்த நேரத்தில் வானிலை எச்சரிக்கைகளையும் பாதுகாப்பு ஆலோசனைகளையும் வழங்க, கடல் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

பிராந்திய மொழிகளில் எச்சரிக்கை: சென்னை மற்றும் பிற இடங்களில் உள்ள தொலைநிலை செயல்பாட்டு நிலையங்கள் உரிய தகவல்கள் உடனுக்குடன் சென்றடைவதை உறுதிசெய்ய, பிராந்திய மொழிகளில் வானிலை எச்சரிக்கைகளையும் ஆலோசனைகளையும் உயா் அலைவரிசை கருவிகள் மூலம் ஒலிபரப்பி வருகின்றன.

தமிழகம், புதுச்சேரி மற்றும் ஆந்திரம் கடற்கரைப் பகுதிகளில், அவசர காலச் சூழல்களைக் கையாள பேரிடா் மீட்புக் குழுக்கள் தயாா் நிலையில் உள்ளன. தேவைப்படும் பட்சத்தில், தேடல் மற்றும் மீட்புப் பணிகள், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடா் நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளும் வகையில் அனைத்துக் கப்பல்களும் விமானங்களும் முழுத் தயாா் நிலையில் உள்ளன.