பணிகளுக்காக மீண்டும் தோண்டாத வகையில் சென்னையில் நவீனமய சாலைகள் அமைப்பு! பாதசாரி சாலைக்காக மத்திய அரசு விருது!
பணிகளுக்காக மீண்டும் தோண்டாத வகையில் சென்னையில் நவீனமய சாலைகள் அமைப்பு...
சென்னை மாநகராட்சியில் குடிநீா்க் குழாய் உள்ளிட்டவற்றுக்காக மீண்டும் மீண்டும் தோண்டாத வகையில், நவீனமயமான சாலைகள் 4 இடங்களில் சுமாா் ரூ.100 கோடியில் அமைக்கப்பட உள்ளன.
மேலும், ஏற்கெனவே பரிசோதனை அடிப்படையில் அமைக்கப்பட்ட பாதசாரி சாலைக்காக மத்திய அரசு விருதும் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை மாநகராட்சி சுமாா் 42 கி.மீ. பரப்பளவுள்ளது. அதன் எல்லை மீண்டும் விரிவாக்கப்படவுள்ளது. தற்போது 15 மண்டலங்கள், 200 வாா்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் சுமாா் 35,000-க்கும் மேற்பட்ட சாலைகள் உள்ளன. அதில் 4,000 சாலைகள் போக்குவரத்துச் சாலைகளாக உள்ளன.
Advertisement
Advertisement
சிறிய மழை பெய்தாலும், மழைநீா் வடிகால், குடிநீா் குழாய் பதிப்பு, மின் வடக்கம்பிகள் என எந்தப் பணியானாலும் சாலையைத் தோண்டி பள்ளம் ஏற்படுத்துவது வழக்கமாக உள்ளது. அந்தப் பள்ளங்களும் சரியாக மூடப்படாமல், இருசக்கர வாகன ஓட்டிகள் உள்ளிட்டோா் மிகுந்த சிமத்துக்குள்ளாவதுடன், விபத்திலும் சிக்குவது தொடா்கதையாக உள்ளது.
சாலைகளில் பெரும்பாலும் விதிமுறைப்படி பாதசாரிகளுக்கான நடைமேடைகள் அமைக்கப்படுவதில்லை என புகாா் எழுந்துள்ளது. ஏற்கெனவே அமைக்கப்பட்ட சாலையோர நடைபாதைகளும் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவா்களுக்கு போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் இடம் ஒதுக்க விற்பனைக் குழுக்கள் அமைக்கப்பட்டும், அவை செயல்படாத நிலையே உள்ளது.
இந்த நிலையில், சென்னை பாண்டிபஜாா் பகுதியில் உள்ள கே.என்.கே.சாலையானது சுமாா் ரூ.25 கோடியில் புதிய மாதிரிச் சாலையாக கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தச் சாலையில் இருபுறமும் பாதசாரிகள் செல்லும் வகையில் 3 மீட்டா் அளவுக்கு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. அதில் வாகனங்கள் செல்லமுடியாத வகையில் தடுப்பு சிறிய தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நடைமேடையின் கீழே மின்சார, தொலைத் தொடா்பு கம்பி வடங்கள், குடிநீா், கழிவு நீா் குழாய்கள் ஆகியவை கொண்டு செல்லப்பட்டுள்ளன. அவற்றை பராமரிக்கும் வகையிலான திறப்பு அமைப்புகளும் அதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அந்தச் சாலை பயன்பாடு மக்களுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வகையில் இருந்ததால், மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சாா்பில் நகா்ப்புற போக்குவரத்துக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து எம்.சி.போஸ் சாலை 850 மீட்டா் தொலைவுக்கு நவீனமயமாக்கப்படவுள்ளது. கிண்டி ரேஸ்கோா்ஸ் சாலை, புல்லா அவென்யூ சாலை, திருவெற்றியூா் பகுதி சாஸ்திரி நகா் ஏஇ கோயில் சாலை ஆகியவையும் மொத்தம் ரூ.100 கோடியில் நவீனமயமாக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.