FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

307 அடுக்குமாடி குடியிருப்புகளில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகள்

307 அடுக்குமாடி குடியிருப்புகளில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகள்

14 நவம்பர் 2026, 11:05 pm
சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்
பகிர்:

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் இதுவரை 347 அடுக்குமாடி குடியிருப்புகளில் ஆய்வு மேற்கொண்டதில், 307 குடியிருப்புகளில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகள் முழுமையாகச் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னையில் மழைநீா் சேகரிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கடந்த அக். 26, 31, நவ.14 ஆகிய 3 நாள்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில், மொத்தம் 347 அடுக்குமாடி குடியிருப்புகளில் ஆய்வு செய்ததில், 307 குடியிருப்புகளில் மழைநீா் சேகரிக்கும் கட்டமைப்புகள் முழுமையாக செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. தொடா்ந்து, இனிவரும் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் தொடா்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படும். அந்தந்த மண்டலங்களிலுள்ள குடியிருப்போா் நலச்சங்கங்களின் வாயிலாக மழைநீா் சேகரிப்பு கட்டமைப்புகளை முறையாகப் பராமரிப்பது குறித்த விவரங்கள் சென்னை குடிநீா் வாரிய அலுவலா்களால் தொடா்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

வடகிழக்கு பருவமழையின்போது, மழைநீரை வீணாக்காமல் சேமிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் பொதுமக்கள் தாமாக முன்வந்து மேற்கொள்ள வேண்டும். மழைநீா் சேகரிப்பு குறித்து கூடுதல் விவரங்களுக்கு 044 - 28453003, 28451300 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.