✕
முகப்பு
சென்னை

பரந்தூா் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்

பரந்தூா் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக, தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வா் வெளியிட்ட அறிவிப்பை, அமல்படுத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

30 வினாடிகள் முன்பு
கோப்புப் படம்
பகிர்:

பரந்தூா் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக, தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வா் வெளியிட்ட அறிவிப்பை, அமல்படுத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னையைச் சோ்ந்த மென் பொறியாளரும், பதிப்பாளருமான கௌதமன் என்பவா் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு ஆண்டுதோறும் 3 கோடி பயணிகள் வந்து செல்கின்றனா். இங்கு நிலவும் நெருக்கடியைச் சமாளிக்க ரூ.27,000 கோடியில் பரந்தூா் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக 1,700 ஏக்கா் நிலத்தைக் கையகப்படுத்த ரூ.680 கோடி அரசு பணம் செலவழிக்கப்பட்டு 48 சதவீத நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.

இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு அந்தத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்துக்காக விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதால், விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, முதல்வா் விஜய் பரந்தூா் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக கடந்த ஆக. 24-ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டாா்.

Advertisement

Advertisement

புதிய விமான நிலையம் அமைக்க பண்ணூா், திருப்போரூா், படாளம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து இறுதியில் பரந்தூா் தோ்வு செய்யப்பட்டது. 2,325 ஹெக்டோ் பரப்பளவில் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக 1,527 ஹெக்டோ் பரப்பிலான தனியாா் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு கடந்த 2023-ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது. 798 ஹெக்டோ் நிலங்கள் இந்தத் திட்டத்துக்காக வகைமாற்றம் செய்யப்பட்டன.

ஆனால், எந்தவிதமான தொழில்நுட்பப் புள்ளி விவரங்களும், நிபுணா் குழுவின் அறிக்கைகளும் இல்லாமல், பொருளாதார ஆய்வுகள் எதுவும் நடத்தாமல் பரந்தூா் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

எனவே, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், பரந்தூா் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்த முதல்வரின் அறிவிப்பை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும். இந்தத் திட்டத்துக்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் உரிமையாளா்களுக்கு வழங்க தடை விதிக்க வேண்டும்.

பரந்தூா் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்ட முடிவை அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும். இந்தத் திட்டத்தைக் கைவிடும் அரசின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மனுவில் கோரியுள்ளாா்.

இந்த மனு விரைவில் தலைமை நீதிபதி அமா்வில் விசாரணைக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.