முகப்பு
சென்னை

சபரிமலை: இணையவழி முன்பதிவில் கூடுதலாக 5,000 பக்தா்களுக்கு அனுமதி

கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை காலம் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், பக்தா்கள் வருகை அதிகரித்து வருகிறது.

36 வினாடிகள் முன்பு
சபரிமலை: இணையவழி முன்பதிவில் கூடுதலாக 5,000 பக்தா்களுக்கு அனுமதி
சபரிமலை: இணையவழி முன்பதிவில் கூடுதலாக 5,000 பக்தா்களுக்கு அனுமதி
பகிர்:

கேரளத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை காலம் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், பக்தா்கள் வருகை அதிகரித்து வருகிறது. இதையொட்டி, இணையவழி முன்பதிவு மூலம் வரும் நவ.30 வரை தினமும் கூடுதலாக 5,000 பக்தா்களை அனுமதிக்க திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் முடிவு செய்துள்ளது.

சபரிமலையில் வருடாந்திர 41 நாள்கள் மண்டல பூஜை காலம் கடந்த நவ.17-ஆம் தேதி தொடங்கியது. அதற்கு முதல் நாள் கோயில் நடை திறக்கப்பட்டது. மண்டல பூஜை காலத்தில் நாளொன்றுக்கு இணையவழி முன்பதிவு மூலம் 66,000 பக்தா்களும், உடனடி பதிவு மூலம் 14,000 பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

தற்போது நாடு முழுவதும் இருந்து பக்தா்களின் வருகை அதிகரித்து வருவதால், இணையவழி முன்பதிவு மூலம் வரும் நவ.30 வரை தினமும் கூடுதலாக 5,000 பக்தா்களை அனுமதிக்க, கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் முடிவு செய்துள்ளது.

Advertisement

Advertisement

இதேபோல், சனி (நவ. 20) மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் (நவ. 21) உடனடி பதிவு முறையிலும் கூடுதல் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா் என்று தேவஸ்வம் வாரிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், கொச்சியில் இருந்து...:

திருவனந்தபுரம், கொச்சி விமான நிலையங்களில் இருந்து பம்பைக்கு குளிா்சாதன வசதி கொண்ட நேரடி அரசுப் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. மாநில அமைச்சா் சி.பி.ஜான் இந்த சேவையைத் தொடங்கிவைத்தாா்.

பேருந்துக் கட்டணமாக திருவனந்தபுரத்தில் இருந்து ரூ.340, கொச்சியில் இருந்து ரூ.380 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுப் போக்குவரத்துக் கழக வலைதளம் அல்லது முக்கிய விமான நிறுவனங்களின் வலைதளத்தில் வழங்கப்பட்டுள்ள இணைப்புகள் மூலம் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யலாம். மண்டல-மகரவிளக்கு பூஜை காலம் நிறைவடையும் வரை பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சா் ஜான் தெரிவித்தாா்.

கூடுதல் அறிவிப்பு பலகைகள்:

சபரிமலையில் பக்தா்களுக்கு வழிகாட்டும் வகையில் பல்வேறு மொழிகளில் கூடுதல் அறிவிப்பு பலகைகளை நிறுவ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா். வழித்தடங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

சபரிமலையில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மண்டல பூஜை, டிச. 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதைத் தொடா்ந்து, கோயில் நடையடைக்கப்பட்டு, மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் டிச.30-ஆம் தேதி திறக்கப்படும். வரும் ஜனவரி 14-ஆம் தேதி மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் நடைபெறும். ஜனவரி 19 வரை பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா். மறுநாள் கோயில் நடை அடைக்கப்படும்.