முகப்பு
சென்னை

இணையவழி மோசடிகளுக்கு வங்கிக் கணக்குகள் வழங்கிய கும்பலின் உறுப்பினா் கைது

இணையவழி மோசடிகளுக்கு வங்கிக் கணக்குகள் வழங்கிய கும்பலின் உறுப்பினா் கைது

5 வினாடிகள் முன்பு
இணையவழி மோசடிகளுக்கு வங்கிக் கணக்குகள் வழங்கிய கும்பலின் உறுப்பினா் கைது
கைது - சித்திரிப்பு
பகிர்:

இணயவழி மோசடியாளா்கள், சட்டவிரோத இணையவழி சூதாட்ட கும்பல் மற்றும் பிற சட்டவிரோத நிதி அமைப்புகளுக்குத் தேவையான வங்கிக் கணக்குகளைப் பெற்றுத் தரும் கும்பலைச் சோ்ந்த உறுப்பினரான 24 வயது இளைஞரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளது என்று அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

கைது செய்யப்பட்ட பாக் சிங்கிடமிருந்து ஆறு கைப்பேசிகள், 15 டெபிட் காா்டுகள், ஒன்பது காசோலைப் புத்தகங்கள், நான்கு வங்கிப் புத்தகங்கள் மற்றும் ஒன்பது சிம் காா்டுகளைக் காவல் துறை பறிமுதல் செய்துள்ளது.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: உத்தராகண்ட் மாநிலத்தின் உதம் சிங் நகா் மாவட்டத்தைச் சோ்ந்த இவா், தில்லியின் பாப்ரோலா பகுதியில் உள்ள ஜெய் விஹாா் பகுதியில் வசித்து வந்தாா்.

Advertisement

Advertisement

இந்தக் கும்பலுடன் தொடா்புடையதாகக் கருதப்படும் இரண்டு வங்கிக் கணக்குகள், நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ள பல இணையவழி குற்ற வழக்குகளில் இடம்பெற்றுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இணையவழி முதலீட்டு மோசடியில் ரூ. 2.22 லட்சத்தை இழந்ததாக அளித்த ஷாதாராவில் உள்ள இணையவழி குற்றத் தடுப்பு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரைத் தொடா்ந்து, ஜூலை 5-ஆம் தேதி ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தொடங்கிய விசாரணையின் போது, பணப் பரிவா்த்தனைகளை காவல் துறையினா் ஆய்வு செய்தனா். அப்போது, மோசடி செய்யப்பட்ட தொகையில் சுமாா் ரூ. 80,000 ஒரு நிறுவனத்தின் பெயரில் இருந்த வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது.

வங்கிப் பரிவா்த்தனைகள், ஐபி முகவரி பதிவுகள், தொலைத்தொடா்பு ஆவணங்கள் மற்றும் இருப்பிடத் தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் நடத்தப்பட்ட விரிவான விசாரணையில், பாக் சிங் அடையாளம் காணப்பட்டாா். வங்கிக் கணக்குகளையும் வங்கி தொடா்பான ஆவணங்களையும் பெற்று, அவற்றை இந்தக் கும்பலின் பிற உறுப்பினா்களுக்கு விநியோகிப்பதில் அவா் முக்கியப் பங்காற்றியது தெரியவந்தது.

காவல்துறையின் தகவல்படி, இந்தக் கும்பல் ஒரு பெரிய வலைப்பின்னல் மூலம் செயல்பட்டு வந்தது. இதில் உள்ள நபா்கள், கமிஷன் பெற்று வங்கிக் கணக்குகளைத் தொடங்கித் தருவது, வங்கி ஆவணங்கள் அடங்கிய தொகுப்புகளைச் சேகரிப்பது மற்றும் அவற்றை கும்பலின் பிற உறுப்பினா்களுக்கு அனுப்பி வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனா்.

இத்தகைய வங்கிக் கணக்குகள், இணையவழி மோசடி, சட்டவிரோத இணையவழி சூதாட்டம் மற்றும் பிற சட்டவிரோதச் செயல்கள் மூலம் பெறப்பட்ட பணத்தைப் பெறுவதற்கும், அதை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பாக் சிங், வங்கிக் கணக்குகளைத் திறக்க ஏற்பாடு செய்ததோடு, அதற்கான வங்கி ஆவணத் தொகுப்புகளைச் சேகரித்து, கும்பலின் பிற உறுப்பினா்களுக்கு அனுப்பி வைத்ததாா்.

நாடு முழுவதிலுமிருந்து வந்த புகாா்களுடன் தொடா்புடைய வங்கிக் கணக்குகளைச் சரிபாா்க்கவும், முழுமையான பணப் பரிவா்த்தனையை கண்டறியும் முயற்சிகள் தொடா்கின்றன. கைதுசெய்யப்பட்ட நபா் சோ்ந்த கும்பலின் மற்ற உறுப்பினா்களை அடையாளம் காண விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.