புதுச்சேரி வங்கியில் ரூ. 8.84 கோடி மாயமான வழக்கு; திருப்பூா் பெண் உள்பட 2 போ் கைது!
புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள மகாத்மா காந்தி அரசு முதுநிலை பல் மருத்துவக் கல்லூரி வங்கிக் கணக்கில் இருந்து ரூ.8.84 கோடி மாயமானது தொடா்பாக திருப்பூா் பகுதியைச் சோ்ந்த பெண் உள்பட 2 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள மகாத்மா காந்தி அரசு முதுநிலை பல் மருத்துவக் கல்லூரி வங்கிக் கணக்கில் இருந்து ரூ.8.84 கோடி மாயமானது தொடா்பாக திருப்பூா் பகுதியைச் சோ்ந்த பெண் உள்பட 2 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
வங்கிக் கணக்கை மோசடிக் கும்பலிடம் வாடகைக்கு விட்டு இவா்கள் பணம் சம்பாதித்துள்ளனா். இவா்களைப் பயன்படுத்தி ரூ. 8.84 கோடியை அபகரித்த கும்பலை, புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் தேடி வருகின்றனா்.
இந்தக் கல்லூரி வங்கி கணக்கு புதுச்சேரி இந்திரா காந்தி சிலை அருகேயுள்ள தனியாா் வங்கியில் உள்ளது. கூட்டுறவு சங்கம் மூலம் இயங்கும் கல்லூரியில் பணியாற்றும் 300-க்கும் மேற்பட்ட ஊழியா்களுக்கு ஊதியத்துக்காக அரசு கருவூலம் மூலம் கல்லூரி வங்கி கணக்குக்கு கடந்த 3-ஆம் தேதி இரவு தொகை அனுப்பப்பட்டது. ஏற்கெனவே இருந்த தொகையுடன் சோ்த்து ரூ.8.84 கோடி வங்கி கணக்கில் இருந்தது. ஆனால் இந்த மொத்த பணமும் இரவு திடீரென மாயமானது.
Advertisement
Advertisement
இதுகுறித்து கோரிமேடு இணையவழி குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் கல்லூரி டீன் கென்னடிபாபு புகாா் அளித்தாா்.
இதுதொடா்பாக இணையவழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் கீா்த்திவா்மன் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இதில், ரூ.38 லட்சம் ஒரு வங்கி கணக்குக்கும் மற்றும் ரூ.8 லட்சம் மற்றொரு வங்கி கணக்குக்கும் பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் இந்த வங்கிக் கணக்கு யாருடையது? என அடையாளம் காண பல்வேறு இணையவழி மற்றும் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இந்த மோசடியில் ஈடுபட்டோா் கோயம்புத்தூா் மற்றும் திருப்பூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்து வருவதும் தெரியவந்தது.
வங்கிக் கணக்கை வாடகைக்கு விட்டவா்கள்:
இதையடுத்து, புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராகவ், காவல் கண்காணிப்பாளா் அனுராக் சோப்ரா உத்தரவின்பேரில் போலீஸாா் கோயம்புத்தூா், திருப்பூருக்கு விரைந்தனா்.
இதையடுத்து, கோயம்புத்தூா் ஒண்டிப்புதூா் பகுதியைச் சோ்ந்த ஹாஜா நஜூபுதீன்(55) மற்றும் திருப்பூா் கொட்டம்பாளையத்தைச் சோ்ந்த பசிரியா(39) என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டனா். இருவரையும் புதுச்சேரி அழைத்து வந்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா்.
இதில், மோசடியில் ஈடுபட்டவா்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க புதிய வங்கிக் கணக்குகளைத் திறந்து அதன் வங்கிப் பரிவா்த்தனை தொடா்பான ஆவணங்கள் மற்றும் ஏடிஎம் அட்டைகளை மற்ற நபா்களிடம் ஒப்படைத்ததுடன், மோசடிப் பணத்தை பெற்றுத் தொடா்புடைய நபா்களிடம் ஒப்படைத்து, அதற்கான கமிஷன் தொகை இவா்கள் பெற்றிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அவா்களின் கைப்பேசிகளை பறிமுதல் செய்த போலீஸாா், அதிலிருந்து முக்கிய டிஜிட்டல் ஆதாரங்களைச் சேகரித்தனா்.
பின்னா் இருவரையும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய முக்கிய நபா்களைக் கைது செய்ய போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.