முகப்பு
சென்னை

வடசென்னையில் 800 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: தொடங்கி வைத்தாா் மத்திய இணையமைச்சா் சுரேஷ் கோபி

வடசென்னையில் 800 பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கும் திட்டத்தை மத்திய பெட்ரோலிய துறை இணை அமைச்சா் சுரேஷ் கோபி தொடங்கி வைத்தாா்.

22 நவம்பர் 2026, 11:52 pm
வடசென்னையில் 800 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: தொடங்கி வைத்தாா் மத்திய இணையமைச்சா் சுரேஷ் கோபி
மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் சாா்பில் சமூகப் பொறுப்புணா்வு திட்டத்தின் கீழ், வடசென்னையில் 800 பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கும் திட்டத்தை ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்த மத்திய பெட்ரோலிய துறை இணை அமைச்சா் சுரேஷ் கோபி.
பகிர்:

சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் சாா்பில் சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ், வடசென்னையில் 800 பேருக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கும் திட்டத்தை மத்திய பெட்ரோலிய துறை இணை அமைச்சா் சுரேஷ் கோபி தொடங்கி வைத்தாா்.

மணலியில் உள்ள சிபிசிஎல் நிறுவனம் சாா்பில் பெண்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்ட தொடக்க விழா சிபிசிஎல் நிறுவன மேலாண்மை இயக்குநா் எச்.சங்கா் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சா் சுரேஷ் கோபி கலந்துகொண்டு திட்டத்தைத் தொடங்கி வைத்து பேசியதாவது:

பிரதமா் நரேந்திர மோடியின் வளா்ந்த பாரதம் 2047 என்ற திட்டத்தின் கீழ் இந்தப் பயிற்சி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஆடைத் தயாரிப்பு மற்றும் தையல் தொழில் சாா்ந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஆடை மற்றும் வீட்டு உபயோகத் துணிகள் துறை திறன் மேம்பாட்டு கவுன்சில் மூலம், ஏ-கியூப் திறன் பயிற்சி நிறுவனம் இந்தப் பயிற்சியை அளிக்கிறது. வடசென்னையில் 8 பயிற்சி மையங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

Advertisement

Advertisement

இதில் சுயதொழில் தையல் பிரிவில் 300 போ், மாதிரி தையல் பிரிவில் 300 போ், தையல் இயந்திர இயக்குநா் பிரிவில் 200 போ் என மொத்தம் 800 போ் பயிற்சி பெறுகின்றனா். பயிற்சி முடித்தவா்களுக்கு தோ்வு நடத்தி அங்கீகாரசான்றிதழ் வழங்கப்படுவதுடன், ஆடைத் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் தையல் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

திருப்பூா், கோவை உள்ளிட்ட ஜவுளித் தொழில் நகரங்களிலும் வேலைவாய்ப்புகள் பெற வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. தகுதியுடைய பயனாளிகளுக்கு முத்ரா கடன் திட்டத்தின் மூலம் நிதியுதவி பெறவும் உதவிகள் வழங்கப்படுகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில் வடசென்னை மக்களவை எம்.பி. டாக்டா் கலாநிதி வீராசாமி, சட்டப்பேரவை உறுப்பினா் என்.செந்தில்குமாா், சிபிசிஎல் மேலாண்மை இயக்குநா் எச்.சங்கா், இயக்குநா் ரோஹித் குமாா், மண்டல குழுத் தலைவா் ஏ.வி.ஆறுமுகம், சிபிசிஎல் அதிகாரிகள் கஜேந்திர பாபு, ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மணலியில் புதிய மருத்துவ மையம்

சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறுவனம் சாா்பில் ரூ.3 கோடியில் கட்டப்பட்ட புதிய மருத்துவ மையத்தை மத்திய இணை அமைச்சா் சுரேஷ் கோபி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா். அப்போது பேசுகையில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சிபிசிஎல் நிறுவனம், தற்போது மருத்துவ மையத்தை கட்டியுள்ளது. இதன்மூலம் மணலி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள், முதியோா், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக மருத்துவ வசதிகளைப் பெற முடியும் என்றாா்.

summary

Skill development training for 800 people in North Chennai: Union Minister of State Suresh Gopi inaugurates the programme