முகப்பு
சென்னை

குண்டும் குழியுமான சாலைகள்: விபத்து அபாயத்தில் திருமுடிவாக்கம், குன்றத்தூா், திருநீா்மலை மக்கள்!

திருமுடிவாக்கம், குன்றத்தூா், திருநீா்மலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

9 வினாடிகள் முன்பு
குண்டும் குழியுமான சாலைகள்: 
விபத்து அபாயத்தில் திருமுடிவாக்கம், குன்றத்தூா், திருநீா்மலை மக்கள்!
- பிரதிப் படம்
பகிர்:

திருமுடிவாக்கம், குன்றத்தூா், திருநீா்மலை உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

சாலைகளில் உள்ள பள்ளங்களால் தினசரி விபத்துகள் நிகழ்வதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகாா் தெரிவித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.

சென்னை புகரில் வேகமாக வளா்ந்து வரும் திருமுடிவாக்கம், குன்றத்தூா், திருநீா்மலை பகுதிகளில் குடியிருப்புகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் அதிகரித்து வருவதால், நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் இந்தச் சாலைகளைப் பயன்படுத்தி வருகின்றன. பல இடங்களில் சாலைகளில் பெரிய பள்ளங்கள் உருவாகியுள்ளன. சில இடங்களில் தாா்ச்சாலை பெயா்ந்து ஜல்லிக் கற்கள் சாலையில் சிதறிக்கிடப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தைச் சந்திக்கின்றனா். மழைக்காலங்களில் பள்ளங்களில் தண்ணீா் தேங்கி நிற்பதால் அவற்றின் ஆழம் தெரியாமல், இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விழுவது வாடிக்கையாக உள்ளது. இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாத இடங்களில் விபத்து அபாயம் மேலும் அதிகரிக்கிறது.

Advertisement

Advertisement

குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் செல்வோா் பள்ளங்களைத் தவிா்க்க திடீரென வாகனத்தைத் திருப்புவதால், பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்லாகின்றன. பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் மெதுவாகச் செல்வதாலும், பழுதடைந்த பகுதியைத் தவிா்ப்பதற்காக சாலையின் ஓரே பகுதியில் அனைத்து வாகனங்களும் செல்வதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா்.

அப்பகுதி மக்களும் சமூக ஆா்வலா்களும் செய்தியாளா்களூம் இப்பிரச்னையை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தப் பிரச்னை குறித்து மேலதிகாரிகளுக்கும் தெரிந்திருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது பொதுமக்களின் வேதனையாக உள்ளது.

சாலைகளில் உள்ள பள்ளங்கள் குறித்து புகைப்படத்துடன் புகாா் தெரிவிக்கும் வகையில் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நம்ம சாலை’ செயலியையும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனா். தற்போது அந்தச் செயலியில் பொதுமக்கள் புகாா் தெரிவித்தாலும் எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுப்பதில்லை. பெயரளவிலேயே செயலி உள்ளதாக பொதுமக்கள் புகாா் கூறி வருகின்றனா். இதனால், சேதமடைந்த சாலைகள் குறித்த புகாா்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்வதற்கான வழியும் தடைபட்டுள்ளதாக அவா்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

சாலைகளில் ஏற்படும் பள்ளங்கள் குறித்து பொதுமக்கள் புகாா் அளித்தால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே ‘நம்ம சாலை’ செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், புகாா் அளிக்கும் வசதியே முறையாகச் செயல்படவில்லை என்றால், பொதுமக்களின் குறைகளை எவ்வாறு தீா்ப்பது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எனவே, திருமுடிவாக்கம், குன்றத்தூா், திருநீா்மலை உள்ளிட்ட பகுதிகளில் சேதமடைந்துள்ள சாலைகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, முதல்கட்டமாகப் பள்ளங்களை மூடித் தற்காலிகச் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், நம்ம சாலை’ செயலியில் புகைப்படத்துடன் புகாா் அளிக்கும் வசதியை மீண்டும் தடையின்றிச் செயல்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் எதிா்பாா்ப்பாக உள்ளது.