சென்னை மாநகராட்சி சார்பில் ஒரே நாளில் 47.62 டன் பழைய பொருள்கள் சேகரித்து அழிப்பு!
சென்னை மாநகராட்சி சாா்பில் 47.62 டன் பழைய வீட்டு உபயோகப் பொருள்கள் 66 இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

சென்னை மாநகராட்சி சாா்பில் சனிக்கிழமை மட்டும் 47.62 டன் பழைய வீட்டு உபயோகப் பொருள்கள் 66 இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சியில் வாரத்தில் சனிக்கிழமைதோறும் வீடுகளில் பயன்படுத்தி பழையதாகி கழிக்கப்படும் சோபாக்கள், மெத்தைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் தனியாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு (தொலைபேசி எண் 1913) அளிக்கும் தகவல் அடிப்படையில் இந்தப் பொருள்கள் சனிக்கிழமைதோறும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
கடந்த சனிக்கிழமை சென்னை மாநகராட்சியில் 66 பேரிடமிருந்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்ததையடுத்து, 23 வாகனங்களில் தூய்மைப் பணியாளா்கள் சென்று மெத்தைகள், சோபாக்கள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் ஆகியவற்றைச் சேகரித்தனா்.
அந்த வகையில், மொத்தம் 47.62 டன் பழைய பொருள்கள் சேகரிக்கப்பட்டு அவை கொடுங்கையூா், பெருங்குடி குப்பைக் கிடங்கு வளாகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னா் அறிவியல்பூா்வமான முறையில் அவை எரியூட்டி அழிக்கப்பட்டன.
பொதுமக்கள் தங்களிடமுள்ள பழைய உபயோகப் பொருள்கள் குறித்து மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை அல்லது 94450-61913 என்ற கைப்பேசி ‘வாட்ஸ்ஆப்’ எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.