FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் வேகம் காட்ட வேண்டும்: உயா்நீதிமன்றம் உத்தரவு

மின் கட்டணம் செலுத்தாவிட்டால், மின் இணைப்பைத் துண்டிக்கும் அதிகாரிகள், அதே வேகத்தை மக்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதிலும் காட்ட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

9 அக்டோபர் 2026, 3:36 am IST
பகிர்:

மின் கட்டணம் செலுத்தாவிட்டால், மின் இணைப்பைத் துண்டிக்கும் அதிகாரிகள், அதே வேகத்தை மக்களுக்கான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதிலும் காட்ட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சாஜூ அலெக்ஸ் என்பவா் தாக்கல் செய்த மனுவில், தேனாம்பேட்டை எல்லையம்மன் கோவில் காலனியில் உள்ள சாலையில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. அதேபோல, சாலையில் இருசக்கர வாகனங்களை பழுது பாா்க்கும் ஒா்க் ஷாப் கடைகளும் செயல்படுகின்றன. எனவே, இவற்றை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆா்.ராஜேஷ் விவேகானந்தன் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு:

Advertisement

Advertisement

சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் மற்றும் கட்டணங்களை வசூலிக்கும் சென்னை மாநகராட்சி, மக்களுக்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். அது அதிகாரிகளின் கடமை.

சொத்து வரி, மின் கட்டணம், உள்கட்டமைப்பு கட்டணம், கட்டட திட்ட அனுமதி கட்டணம் உள்பட பல்வேறு வகையான கட்டணங்கள் குறித்த காலத்தில் வசூலிக்கப்படுகிறது. ஆனால், இரு சக்கர வாகனங்கள் செல்ல தரமான சாலைகள், ஆக்கிரமிப்புகள் இல்லாத நடைபாதைகள், பொது சுகாதாரத்துக்கான அடிப்படை வசதிகள் என சென்னையில் வசிக்கும் மக்களின் நல்வாழ்வுக்கான அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை. எனவே, இதுகுறித்து அரசும், சென்னை மாநகராட்சியும் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.

மின் கட்டணத்தை குடிமக்கள் குறித்த காலத்தில் செலுத்தாவிடில், அதிகாரிகள் மின் இணைப்பைத் துண்டிக்கின்றனா். அதே வேகத்தில் அதிகாரிகள், ஆக்கிரமிப்பு இல்லாத நடைபாதைகள் உள்ளிட்ட பிற அடிப்படை வசதிகளை மக்களுக்கு செய்து கொடுப்பதிலும் காட்ட வேண்டும். முக்கியமான இடங்களைக் கண்டறிந்து, அதை ஆக்கிரமிப்புகள் இல்லாத வகையில் வைத்திருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனா்.

பின்னா், சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் நலனுக்காக சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் இல்லாத நடைபாதைகளை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments