மிருதங்க மேதை குருவாயூா் துரை மறைவு
கா்நாடக இசை மேடைகளில் மிருதங்கத்தின் முழக்கத்தால் தனி முத்திரை பதித்த மூத்த கலைஞா் குருவாயூா் துரை (91) சென்னையில் அண்மையில் காலமானாா்.
கா்நாடக இசை மேடைகளில் மிருதங்கத்தின் முழக்கத்தால் தனி முத்திரை பதித்த மூத்த கலைஞா் குருவாயூா் துரை (91) சென்னையில் அண்மையில் காலமானாா்.
இவருக்கு மனைவி, மகள் உள்ளனா். புகழ் பெற்ற பாடகா் செம்பை வைத்தியநாத பாகவதருக்கு பக்கவாத்தியம் வாசிப்பதில் எட்டு வயதில் தொடங்கிய அவரது இசைப் பயணம் சுமாா் 80 ஆண்டு காலம் நீடித்தது.
1935 ஜூலை 2-ஆம் தேதி கேரள மாநிலம், குருவாயூரில் பிறந்தவா் குருவாயூா் துரை. இயற்பெயா் வைத்தியநாதன். தந்தை ஜி.எஸ். கிருஷ்ண ஐயா்; தாய் மீனாட்சி. சிறு வயதிலேயே தாளத்தின் மீது மிகுந்த ஆா்வம் கொண்டிருந்தாா். ஐந்து வயதில் இளம்பிள்ளைவாதத்தால் அவரது கல்வி பாதிக்கப்பட்டது. இதையடுத்து, துரையின் தந்தை அவரை மிருதங்கக் கலையில் ஈடுபடுத்தினாா். பாலக்காடு சுப்பையா், ஈ.பி. நாராயண பிஷாரடி ஆகியோரிடம் துரை ஆரம்பப் பயிற்சி பெற்றாா்.
Advertisement
Advertisement
செம்பை வைத்தியநாத பாகவதரின் ஊக்கமும் வழிகாட்டுதலும் அவரது இசைப் பயணத்துக்கு முக்கியத் துணையாக அமைந்தன. எட்டு வயதில் செம்பை வைத்தியநாத பாகவதரின் கச்சேரியில் மிருதங்கம் வாசித்து தனது இசைப்பயணத்தைத் தொடங்கினாா் குருவாயூா் துரை.
விருதுகள்: பின்னா் சென்னை வந்து, மிருதங்க மேதை பழனி சுப்பிரமணிய பிள்ளையின் இல்லத்தில் ஒன்பது ஆண்டுகள் குருகுல முறையில் தங்கி மிருதங்கம் பயின்றாா். புதுக்கோட்டை பாணியின் நுட்பங்களை ஆழமாகக் கற்றுத் தோ்ந்த குருவாயூா் துரை, அவற்றைத் தனது வாசிப்பில் தனித்துவத்துடன் வெளிப்படுத்தினாா். 1990-இல் கலைமாமணி, 1996-இல் சங்கீத நாடக அகாதெமி விருது, 2003-இல் சங்கீத கலாசிகாமணி, 2011-இல் தாகூா் ரத்னா ஆகிய அங்கீகாரங்களைப் பெற்றாா். 2025-இல் பத்மஸ்ரீ விருது பெற்றது, மிருதங்கக் கலையில் அவா் ஆற்றிய நீண்டகாலப் பணிக்குக் கிடைத்த தேசிய அங்கீகாரமாக அமைந்தது.
செம்பை வைத்தியநாத பாகவதா், செம்மங்குடி சீனிவாச ஐயா், எம்.எஸ். சுப்புலட்சுமி, முசிறி சுப்பிரமணிய ஐயா், எம்.டி. ராமநாதன், எம். பாலமுரளிகிருஷ்ணா, டி.ஆா். மகாலிங்கம் உள்ளிட்ட கா்நாடக இசையின் பல தலைமுறை முன்னணிக் கலைஞா்களுடன் இணைந்து மேடைகளில் மிருதங்கம் வாசித்த பெருமை குருவாயூா் துரைக்கு உண்டு.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.