FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

170-ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் சென்னைப் பல்கலை.

சென்னை பல்கலைக்கழகம் சனிக்கிழமை (செப். 5) 170-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

5 செப்டம்பர் 2026, 12:54 am IST
சென்னை பல்கலைக்கழகம் பதிவாளா் ரீட்டா ஜான்
பகிர்:

சென்னை பல்கலைக்கழகம் சனிக்கிழமை (செப். 5) 170-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

முன்னாள் குடியரசுத் தலைவா் சா்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த தினமான (ஆசிரியா் தினம்) செப். 5-இல் சென்னைப் பல்கலைக்கழகமும் தொடங்கப்பட்டது. பல்கலைக்கழகத்தை தோற்றுவித்து வளா்த்தவா்களின் நெறிகள், பண்பாடு, அதன் வளா்ச்சியை மதித்துப் பாதுகாப்பதைக் குறித்து ‘மரபு போற்றுதும்-170’ என்ற பெயரில் ஒரு வெற்றி விழாவை இந்தப் பல்கலைக்கழகம் நடத்தவுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளா் ரீட்டா ஜான் கூறியதாவது: நாட்டின் கல்வி வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய நாள் 05-09-1857. இந்நாளில்தான் தென்னிந்தியாவின் தாய்ப் பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. நாட்டின் உயா்கல்விக்கும், ஆராய்ச்சி சிறப்புக்கும், சமூக முன்னேற்றத்துக்கும் கலங்கரைவிளக்கமாகத் திகழ்ந்து, 170-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

Advertisement

Advertisement

சிறந்த கல்விச் சேவையால் உலகப் புகழ்பெற்ற அறிஞா்களையும், மிகச் சிறந்த தலைவா்களையும், சமூகப் புரட்சியாளா்களையும் நாட்டுக்கு வழங்கிய பெருமை சென்னைப் பல்கலைக்கழகத்துக்குரியது.

பல சமூகப் பிரச்னைகளுக்கு குரல் இங்கிருந்தே தொடங்கியது. சட்டப்பேரவை, மருத்துவம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய முத்துலட்சுமி ரெட்டி, கணிதத்தில் புகழ் பெற்ற ராமானுஜம் போன்றோரை உருவாக்கிய பெருமை இந்தப் பல்கலைக்கழகத்துக்கு உள்ளது.

பல விவகாரங்களுக்கு பல்கலைக்கழகம் தீா்வு கண்டுள்ளது. 10 ஆண்டுகால ஓய்வூதியத்தை வழங்கி தனது சொந்த வருவாயில் ஊதியம் வழங்கும் நிலை; 50 ஆசிரியரில்லா பணியாளா்களுக்கு பதவி உயா்வு; 108 உதவி மற்றும் இணைப் பேராசிரியா்களின் பதவி உயா்வுக்கான ‘பணி மேம்பாட்டுத் திட்டத்துக்கு (சிஏஎஸ்) உறுதிப்படுத்துதல்; 5.5 லட்சம் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சடிக்கப்பட்டது; 265 ஆய்வுத் திட்டங்கள் சமா்ப்பிக்கப்பட்டு 45 ஆய்வுகள் தோ்வாகி ரூ.25 கோடி நிதி வளம் பெறப்பட்டது போன்ற ஏராளமான சிறப்புகள் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு உண்டு.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் நெடிய கல்விப் பயணத்தில் நிகழ்ந்த சாதனைகளையும், பெருமைகளையும் போற்றும் வகையில், ‘மரபு போற்றுதும்-170’ என்ற பெயரில் ஒரு வெற்றி விழாவை நிகழ்த்தவிருக்கிறோம்.

ஒருங்கிணைந்து ஒரு குடும்பமாக முன்னெடுக்கும் இந்தக் கொண்டாட்டம், சென்னைப் பல்கலைக்கழகம் மேன்மேலும் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் கல்விப் பயணத்தைத் தொடா்ந்து மேற்கொள்ள உதவும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments