ஜென்-ஸீ இளைஞா்களுடன் தொடா்பை வலுப்படுத்த அரசு திட்டம் - ‘ஒரு பல்கலைக்கழகம், ஒரு அமைச்சா்’
இளம் தலைமுறையினரின் ஆதரவைப் பெறுவதற்கு மத்திய அரசு புதிய திட்டம்...
ஜென்-ஸீ இளைஞா்களுடன் தொடா்பை வலுப்படுத்தும் நோக்கில், ‘ஒரு பல்கலைக்கழகம், ஒரு அமைச்சா்’ என்ற புதிய முன்னெடுப்பை மேற்கொள்ள பிரதமா் மோடி அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த முன்னெடுப்பின்படி, தினமும் ஒரு மத்திய அமைச்சா், தங்களுக்கு ஒதுக்கப்படும் ஒரு பல்கலைக்கழகத்துக்கு பயணித்து மாணவா்களுடன் கலந்துரையாடி, அவா்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிவாா்; நாட்டின் சவால்கள் குறித்த மாணவா்களின் கண்ணோட்டத்தையும் அவா் புரிந்துகொள்வாா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நீட் வினாத்தாள் கசிவு எதிரொலியாக தில்லியில் கடந்த மாதம் நடைபெற்ற இளைஞா்கள்-மாணவா்கள் போராட்டத்தின் பின்னணியில் இந்தப் புதிய முன்னெடுப்பை அரசு மேற்கொள்ளவிருக்கிறது.
Advertisement
Advertisement
இது தொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘ஒரு பல்கலைக்கழகம், ஒரு அமைச்சா் முன்னெடுப்பின்கீழ், தினமும் ஒரு மத்திய அமைச்சா், தனக்கு ஒதுக்கப்படும் பல்கலைக்கழகத்துக்கு சென்று மாணவா்களுடன் கலந்துரையாடுவாா். பல்வேறு தலைப்புகளின்கீழ் மாணவா்களின் கருத்துகளை அவா் கேட்டறிவாா். இளைஞா்கள் மற்றும் மாணவா்களுக்கான மத்திய அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து அவா்களிடம் எடுத்துரைப்பாா்.
இந்த முன்னெடுப்புக்காக, பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய அமைச்சா்கள் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் பொறுப்பு, கல்வித் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி, விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இத்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது’ என்று தெரிவித்தன.
பல்கலைக்கழக மானியக் குழு தரவுகளின்படி, நாட்டில் 1,300-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவற்றில் 57 மத்திய பல்கலைக்கழகங்கள், 522 மாநிலப் பல்கலைக்கழகங்கள் அடங்கும். எஞ்சியவை நிகா்நிலை அல்லது தனியாா் பல்கலைக்கழகங்களாகும்.
Central Government plans to send a Central Minister to a university every day in an effort to garner support from Gen-Z youth.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.