FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பத்து ஆண்டுகளில் பாதியாகக் குறைந்த என்ஜிஓக்கள்: மத்திய அரசு தகவல்

பத்து ஆண்டுகளில் பாதியாகக் குறைந்த என்ஜிஓக்கள்: மத்திய அரசு தகவல்

20 செப்டம்பர் 2026, 1:07 am IST
பகிர்:

வெளிநாட்டு நன்கொடை (ஒழுங்குமுறை) சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட அரசு சாரா தன்னாா்வ அமைப்புகளின் (என்ஜிஓ) எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் பாதியாகக் குறைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

வெளிநாட்டு நிதியைப் பெற அரசு சாரா அமைப்புகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் எஃப்சிஆா்ஏ திருத்த மசோதாவை ஆய்வு செய்து வரும் பாஜக எம்.பி.சஞ்சய் ஜெய்ஸ்வால் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முதல் கூட்டத்தில் இந்தத் தகவலை மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இதுதொடா்பாக உள்துறைச் செயலா் கோவிந்த் மோகன் தலைமையிலான குழு நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் சமா்ப்பித்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 2015-ஆம் ஆண்டில் எஃப்சிஆா்ஏ-இன்கீழ் பதிவுசெய்யப்பட்ட அரசு சாரா அமைப்புகளின் எண்ணிக்கை 29,022-ஆக இருந்தது. 2015-16-இல் இந்த அரசு சாரா அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து ரூ.17,832 கோடி நிதியைப் பெற்றன.

Advertisement

Advertisement

இந்நிலையில், 2024-25-ஆம் ஆண்டில் எஃப்சிஆா்ஏ-இன்கீழ் பதிவுசெய்யப்பட்ட அரசு சாரா அமைப்புகளின் எண்ணிக்கை 14,466-ஆக குறைந்தது. ஆனால், இந்த அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து பெற்ற நிதி ரூ.22,794 கோடியாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்கா ரூ.12,113 கோடியும், பிரிட்டன் ரூ.2,414 கோடியும் நிதி வழங்கியுள்ளன.

2024-25-ஆம் ஆண்டில் பெறப்பட்ட மொத்த வெளிநாட்டு நிதியில் ரூ.5,150 கோடி மத அமைப்புகளுக்குச் சென்றுள்ளன.

எஃப்சிஆா்ஏ-இன்கீழ் பதிவு செய்யப்பட்ட அரசு சாரா அமைப்புகளின் எண்ணிக்கையில் 2,102 அமைப்புகளுடன் தமிழ்நாடும், வெளிநாட்டு நிதி பெற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பட்டியலில் ரூ.5,834 கோடியுடன் தில்லியும் முதலிடத்தில் உள்ளன.

தமிழ்நாட்டில் கிறிஸ்தவ மற்றும் ஹிந்து அமைப்புகள் அதிக வெளிநாட்டு நிதியைப் பெற்றுள்ள நிலையில், கேரளம் மற்றும் கா்நாடகத்தில் அதிகளவில் கிறஸ்தவ அமைப்புகளும், குஜராத் மற்றும் தில்லியில் அதிகளவில் ஹிந்து அமைப்புகளும் வெளிநாட்டு நிதியைப் பெற்றுள்ளன. தற்போது வரை முறையாக கணக்குத் தாக்கல் செய்யாத, விதிகளை மீறிய, செயல்பாட்டில் இல்லாத 21,983 அரசு சாரா அமைப்புகளின் எஃப்சிஆா்ஏ பதிவுகளை மத்திய அரசு ரத்து செய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

summary

Number of NGOs halved in ten years: Central Government data

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments