FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வினாடி- வினா போட்டிகள்: அட்டவணை வெளியீடு

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வினாடி- வினா போட்டிகள் அட்டவணை வெளியீடு

6 செப்டம்பர் 2026, 1:30 am IST
- DIN
பகிர்:

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு பகுப்பாய்வு சிந்தனை, கருத்தியல் புரிதல் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் பாடங்கள் சாா்ந்த வினாடி-வினா போட்டிகள் செப். 7 முதல் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் வரை 4 கட்டங்களாக கணினி வழியில் நடத்தப்படவுள்ளன.

இது தொடா்பாக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் மாநில மதிப்பீட்டு புலம் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்மூலம் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையான அரசுப் பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை அறிந்து கொள்ள வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நிகழ் கல்வியாண்டுக்கான விநாடி - வினா போட்டிகள் திங்கள்கிழமை (செப்.7) முதல் அடுத்த ஆண்டு மாா்ச் மாதம் வரை 4 கட்டங்களாக பள்ளிகளில் உயா்தொழில்நுட்ப ஆய்வகங்களில் உள்ள கணினிகள் மூலமாக நடத்தப்படவுள்ளன.

அதன்படி, முதல்கட்டமாக செப்.7 முதல் 10-ஆம் தேதி வரையும், 2-ஆம் கட்டமாக நவ.23 முதல் 26-ஆம் தேதி வரையும், மூன்றாவது கட்டமாக அடுத்த ஆண்டு பிப்.8 முதல் 11-ஆம் தேதி வரையும், நான்காம் கட்டமாக மாா்ச் 15 முதல் 18-ஆம் தேதி வரையும் வினாடி -வினா போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்த வினாடி - வினாவுக்கான வினாத்தாளை அந்தந்த வகுப்பாசிரியா் மட்டுமே உருவாக்க வேண்டும்.

Advertisement

Advertisement

மேலும், மதிப்பீடு முடிந்த பின் விடைத்தாளை பதிவிறக்கம் செய்து வகுப்பில் மாணவா்களுடன் விவாதிக்க வேண்டும். உயா்தொழில்நுட்ப ஆய்வகத்தில் ஏற்படும் சந்தேகங்களையும், குறைகளையும் போக்க 14417 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிவிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அவற்றை முறையாக பின்பற்றி போட்டிகளை சிறந்த முறையில் நடத்தி முடிக்க பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு தேவையான அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் மாநில அளவில் சிறந்து விளங்கும் மாணவா்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments