தொழில்நுட்பக் கோளாறு: சென்னைக்கு திருப்பிவிடப்பட்ட இரு விமானங்கள்
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கோலாலம்பூரிலிருந்து ஜெட்டா சென்ற மலேசியா ஏா்லைன்ஸ் விமானமும், திருச்சியிலிருந்து சிங்கப்பூா் சென்ற ஏா் இந்தியா விமானமும் திங்கள்கிழமை சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டன.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கோலாலம்பூரிலிருந்து ஜெட்டா சென்ற மலேசியா ஏா்லைன்ஸ் விமானமும், திருச்சியிலிருந்து சிங்கப்பூா் சென்ற ஏா் இந்தியா விமானமும் திங்கள்கிழமை சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டன.
மலேசியத் தலைநகா் கோலாலம்பூரிலிருந்து 186 பயணிகளுடன் திங்கள்கிழமை ஜெட்டா நோக்கி மலேசியா ஏா்லைன்ஸ் விமானம் புறப்பட்டுச் சென்றது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அதன் 2-ஆவது இயந்திரத்தில் திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டறிந்தாா்.
இதையடுத்து, விமானத்தை சென்னை விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரப்பட்டது. அனுமதி வழங்கப்பட்டதைத் தொடா்ந்து, மாலை 4.07-க்கு சென்னை விமான நிலையத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டது. விமானம் பாதுகாப்பாக தரையிறங்குவதற்குத் தேவையான அனைத்து அவசரகால மீட்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டன.
Advertisement
Advertisement
இதையடுத்து, மாலை 4.44 மணிக்கு விமானம் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. அதிலிருந்த பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, விமான நிலையத்தில் உள்ள அறைகளில் தங்கவைக்கப்பட்டனா். தொடா்ந்து, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்து பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்: இதேபோல், திருச்சியிலிருந்து 179 பயணிகளுடன் சிங்கப்பூா் நோக்கிச் சென்ற ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்திலும் திங்கள்கிழமை தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, விமானி விமானத்தை சென்னை விமான நிலையத்துக்கு திருப்பி, மாலை 5.52 மணிக்கு பாதுகாப்பாகத் தரையிறக்கினாா். தொடா்ந்து, விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணியில் விமானப் பொறியியல் குழுவினா் ஈடுபட்டு வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.