சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் தனியார் பேருந்து ஓட்டுநருக்கும் இடையே தகராறு : போக்குவரத்து பாதிப்பு
பரனூர் சுங்கச்சாவடியில் தனியார் பேருந்து ஓட்டுநருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து அந்தப் பேருந்து சாலை நடுவே நிறுத்தப்பட்டது. இதனால் அச்சாலையில் போக்குவரத்து
பரனூர் சுங்கச்சாவடியில் தனியார் பேருந்து ஓட்டுநருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து அந்தப் பேருந்து சாலை நடுவே நிறுத்தப்பட்டது. இதனால் அச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுரையில் இருந்து திங்கள்கிழமை, சென்னை நோக்கி வந்த ஒரு தனியார் பேருந்து செங்கல்பட்டை அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் வரி செலுத்தாமல் கிளம்பியதாகக் கூறப்படுகிறது. இதனால், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் தனியார் பேருந்தின் ஓட்டுநர் பிரபுவுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. அதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள், ஓட்டுநர் பிரபுவைத் தாக்கினர்.
இந்தத் தகராறு காரணமாக, சுங்கச்சாவடி வாயிலில் அந்தப் பேருந்து நிறுத்தப்பட்டதால் மற்ற வாகனங்கள் நகர முடியாமல் செங்கல்பட்டுக்கும், சிங்கபெருமாள்கோவிலுக்கும் இடையே தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றிய தகவலறிந்து வந்த செங்கல்பட்டு கிராமிய காவல்துறையினர் இரு தரப்பிருக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தனியார் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்ததைதைத் தொடர்ந்து, ஓட்டுநர் பிரபு பேருந்தை ஓட்டிச் சென்றார்.
இதற்கிடையில், திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் சில அரசியல் அமைப்புகள் மற்றும் கட்சியினர் செல்லும் வாகனங்களுக்கு சுங்க வரிவிலக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், பரனூர் சுங்கச்சாவடியில் யாருக்கும் வரிவிலக்கு சலுகை வழங்கப்படுவதில்லை.
இதனால், அங்கு தினமும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே தகராறு ஏற்படுவதாகவும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வாகன ஓட்டுநர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.