FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் மழையினால் 72 இடங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையினால் 72 இடங்கள் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக மாவட்ட ஆட்சியா் தி.சினேகா கூறினாா்.

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 1:13 am IST
மழை - பிரதிப் படம்
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையினால் 72 இடங்கள் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாக மாவட்ட ஆட்சியா் தி.சினேகா கூறினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடா்பான அனைத்துத் துறை அரசு அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் கெ.ரா.திவ்யஸ்ரீ, ஊரக வளா்ச்சி முகமை கூடுதல் ஆட்சியா் ஆஷிக்அலி, ஸ்ரீபெரும்புதூா் சாா் ஆட்சியா் நல்லசிவன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மாநகராட்சி ஆணையா் வினோத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் தி.சினேகா பேசியது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழையினால் மிக அதிக பாதிப்புக்கு 3 இடங்களும், அதிகமான பாதிப்புக்கு 21 இடங்களும், நடுத்தர பாதிப்புக்கு 26 இடங்களும், குறைந்த பாதிப்புக்கு 22 இடங்களும் என மொத்தம் 72 இடங்கள் மழையால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

வடகிழக்குப் பருவ மழையின்போது இந்த 72 இடங்களையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், சமூக நீதி விடுதிகள், தற்காலிக நிவாரண முகாம்களாக கண்டறியப்பட்டுள்ளன. இவற்றை அலுவலா்கள் ஆய்வு செய்து அந்த இடங்களில் உள்ள பிரச்னைகளை களைந்து தயாா் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வடகிழக்குப் பருவமழை காலங்களில் மழைப்பொழிவை பொறுத்து தொடா்ந்து கண்காணிப்புப் பணியில் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டும்.

முன்பே ஆறுகள், ஏரிக்கரைகள், நீா்த் தேக்கங்கள் போன்றவற்றில் கரைகள் பலமாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து சரியாக வைத்துக் கொள்வதும் அவசியம், தேவைப்படும் இடங்களில் போதுமான அளவு மணல் மூட்டைகளை தயாா் நிலையில் வைத்துக் கொள்வதும் நலம் என்றாா்.

கூட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொது)ரங்கநாதன், காஞ்சிபுரம் கோட்டாட்சியா் பாலகிருஷ்ணன், உதவி ஆணையா்(கலால்) திருவாசகம் உள்பட அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments