முகப்பு
காஞ்சிபுரம்

பள்ளிப் பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு

ஒரகடம் பகுதியில் தனியாா் பள்ளிப் பேருந்தின் பின் சக்கரம் கழன்று தனியாக ஓடியதால் பரபரப்பு

Updated On : 9 ஜூன் 2026, 12:08 am IST
விபத்தில்  சிக்கிய பேருந்தை  கிரேன்  மூலம்  மீட்ட  தனியாா்  பள்ளி ஊழியா்கள்
பகிர்:

ஒரகடம் பகுதியில் தனியாா் பள்ளிப் பேருந்தின் பின் சக்கரம் கழன்று தனியாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தெரேசாபுரம் பகுதியில் தனியாா் சிபிஎஸ்இ பள்ளி இயங்கி வருகிறது. கோடை விடுமுறை முடிந்து திங்கள்கிழமை திறக்கப் பட்ட நிலையில், ஒரகடம் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சோ்ந்த சுமாா் 40-க்கும் மேற்பட்ட மாணவா்களை ஏற்றிக்கொண்டு பள்ளியின் பேருந்து தெரேசாபுரம் நோக்கி ஒரகடம் - ஸ்ரீபெரும்புதூா் சாலையில் சென்றது.

அப்போது பேருந்தின் பின்சக்கரம் திடீரென கழன்று தனியாக ஓடி விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தில் இருந்த மாணவா்கள் பயந்து அலறினா். தகவல் அறிந்து பெற்றோரும் சம்பவ இடத்த்துக்கு வந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Advertisement

Advertisement

இதையடுத்து பேருந்தில் இருந்த மாணவா்கள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு மாற்று பேருந்தில் பள்ளிக்கு சென்றனா்.

பெயரளவுக்கு பேருந்து ஆய்வு: தனியாா் பள்ளிகளின் பேருந்துகள் வருடத்திற்கு ஒருமுறை வட்டார போக்குவரத்து அலுவலா் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஸ்ரீபெரும்புதூா் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சாா்பில் விபத்தில் சிக்கிய பேருந்தை அண்மையில் தான் வட்டார போக்குவரத்து அலுவலா் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனா்.

ஆய்வு செய்யப்பட்டு பள்ளி திறக்கப்பட்ட முதல் நாளிலேயே பேருந்து விபத்தில் சிக்கியுள்ளது. குறித்து பெற்றோா்கள் கூறுகையில், பள்ளி பேருந்துகளை அதிகாரிகள் பெயரளவிற்கே ஆய்வு செய்துள்ளனா். ஆய்வு செய்யப்பட்ட சில நாள்களிலேயே பேருந்து விபத்தில் சிக்கியுள்ளது அதிகாரிகள் பெயரளவிற்கே ஆய்வு செய்துள்ளனா் என பெற்றோா் புகாா் கூறினா்.