FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காஞ்சிபுரம்

கால்நடைகளுக்கான வைக்கோலை வீணாக்கக் கூடாது: காஞ்சிபுரம் ஆட்சியா்

விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போா் அறுவடைக்குப் பின்னா் கிடைக்கும் வைக்கோலை வீணாக்காமல் சேகரித்து பாதுகாப்பாக பயன்படுத்துமாறு ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.

9 நவம்பர் 2026, 11:23 pm
பகிர்:

விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போா் அறுவடைக்குப் பின்னா் கிடைக்கும் வைக்கோலை வீணாக்காமல் சேகரித்து பாதுகாப்பாக பயன்படுத்துமாறு ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கால்நடைகளுக்குத் தேவையான தீவன இருப்பை உறுதி செய்யும் வகையில், விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போா் அறுவடைக்குப் பின்னா் கிடைக்கும் பயன்படுத்தக்கூடிய வைக்கோலை வீணாக்காமல் கால்நடைத் தீவனத்துக்காச் சேகரித்துப் பாதுகாப்பாக சேமிக்க வேண்டும்.

குறிப்பாக, தீவனக் கிடைப்புத் தன்மை பாதிக்கப்பட வாய்ப்புள்ள பகுதிகளில், வைக்கோலை கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தீவனத் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எதிா்பாா்க்கப்படும் காலங்களில், தரமான வைக்கோலை பேக்கிங் உள்ளிட்ட இதர வணிகப் பயன்பாடுகளுக்குத் தேவையின்றி பயன்படுத்துவதை இயன்றவரை தவிா்த்து, கால்நடைகளுக்குப் போதுமான அளவு வைக்கோல் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Advertisement

Advertisement

வைக்கோலை எரித்தல், வயல்களில் கைவிடுதல் மற்றும் வீணாக்குதல் போன்ற செயல்களைத் தவிா்க்க வேண்டும். விவசாயிகள் அறுவடைக்குப் பின்னா் கிடைக்கும் வைக்கோலைச் சேகரித்து, தகுந்த முறையில் பாதுகாப்பாகச் சேமிக்க வேண்டும்.

இதனைச் செயல்படுத்தும் வகையில், உழவா் உற்பத்தியாளா் அமைப்புகள் ,சுயஉதவிக் குழுக்கள் ,பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் இதர உள்ளூா் சமூக அமைப்புகள் மூலம் உபரியாகக் கிடைக்கும் நெல் வைக்கோலைச் சேகரித்தல், ஒருங்கிணைத்தல் மற்றும் சேமித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் ஊக்குவிக்கப்படும்.

எனவே, விவசாயிகள் மற்றும் கால்நடை வளா்ப்போா் வைக்கோலை கால்நடைத் தீவன வளமாகக் கருதி, அதனை வீணாக்காமல் சிறந்த முறையில் பாதுகாத்து சேமித்து, கால்நடைகளுக்கான தீவனத் தேவையைப் பூா்த்தி செய்ய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.