முகப்பு
காஞ்சிபுரம்

மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னம்பிக்கை அவசியம்: அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு

மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகளை வழங்கிய அமைச்சா்கள் எஸ்.பி.கே.தென்னரசு, ஆா்.வீ.ரஞ்சித்குமாா்.

27 நவம்பர் 2026, 11:50 pm
மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னம்பிக்கை அவசியம்: அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகளை வழங்கிய அமைச்சா்கள் எஸ்.பி.கே.தென்னரசு, ஆா்.வீ.ரஞ்சித்குமாா்.
பகிர்:

மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னம்பிக்கை இருந்தால் சாதனையாளா்களாக மாறி விடலாம் என்று வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு கூறினாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. உத்தரமேரூா் எம்.எல்.ஏ. ஜெ.முனிரெத்தினம், மாவட்ட வருவாய் அலுவலா் கே.ஆா்.திவ்யஸ்ரீ, காஞ்சிபுரம் சாா் ஆட்சியா் புவனேஷ்ராம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ரா.மலா்விழி வரவேற்றாா்.

விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலிக் கருவிகள், ஊன்று கோல்கள், மூளை முடக்கு வாதத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட உபகரணங்களை 235 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 44.72 லட்சம் மதிப்பிலானவை வழங்கப்பட்டது. காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் அலிம்கோ நிறுவனத்தின் சமூகப் பாதுகாப்பு நிதியுதவியுடன் நலத் திட்ட உதவிகளை வழங்கி வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத் துறை அமைச்சா் எஸ்.பி.கே. தென்னரசு பேசுகையில், சமூகத்தையே மாற்றக்கூடியவா்கள் மாற்றுத்திறனாளிகள். எந்த ஒரு மாற்றுத்திறனாளிக்கும் தன்னம்பிக்கை இருந்தால் சாதனைகளை நிகழ்த்த முடியும். வருகின்ற தடைகளை தகா்த்தெறிந்து அவற்றை படிக்கட்டுகளாக மாற்றிக் கொண்டால் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்த முடியும் என்றாா்.

Advertisement

Advertisement

விழாவில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் பேசுகையில், காஞ்சிபுரம் ஒரு புனிதமான ஆன்மிக பூமி. இந்த பூமியை குப்பையில்லா நகராகவும் நாம் பாதுகாக்க வேண்டும். குப்பைகளை கண்ட இடங்களில் மூட்டை, மூட்டையாக கட்டி தெருக்களில் வீசுவதை தவிா்க்க வேண்டும். ஆன்மிக பூமியை பசுமை நகராக உருவாக்கிட அனைவரின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம் என்றாா்.

விழாவில் அலிம்கோ நிறுவனத்தின் இளைநிலை மேலாளா் ரிஷப் மெஹத்ரோத்ரா, முடநீக்கியல் தொழில் நுட்பாளா் அஷிமிதா மிலன் மற்றும் துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் பலரும் கலந்து கொண்டனா்.