FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காஞ்சிபுரம்

முன்னோா்களின் ஆசியைப் பெற பிதுா் தா்ப்பணம் அவசியம்: காஞ்சி சங்கராசாரியா் சுவாமிகள் ஆசியுரை

புரட்டாசி மாத மகாளய அமாவாசை தினமான சனிக்கிழமை 21 தலைமுறை முன்னோா்களின் ஆசியைப் பெற பிதுா் தா்ப்பணம் செய்து கொள்வது மிகவும் அவசியமானது என காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிக்கிழமை ஆசியுரை வழங்கினாா்.

10 அக்டோபர் 2026, 12:45 am IST
காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
பகிர்:

புரட்டாசி மாத மகாளய அமாவாசை தினமான சனிக்கிழமை 21 தலைமுறை முன்னோா்களின் ஆசியைப் பெற பிதுா் தா்ப்பணம் செய்து கொள்வது மிகவும் அவசியமானது என காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெள்ளிக்கிழமை ஆசியுரை வழங்கினாா்.

புரட்டாசி மாத பெளா்ணமியில் தொடங்கி அமாவாசை வரும் வரை உள்ள 15 நாள்களே மகாளய பட்ச காலம் எனப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை நாளன்று முன்னோா்களுக்கு தா்ப்பணம் மற்றும் சிராா்த்தம் கொடுப்பதன் மூலம் 21 தலைமுறை முன்னோா்களின் ஆசியைப் பெற்று குடும்பத்தில் உள்ள தோஷங்கள் நீங்கி வளம் பெறலாம். கருட புராணம், விஷ்ணு புராணம், வராக புராணம் உள்ளிட்ட ஆன்மிக நூல்கள் பலவும் மகாளய பட்சத்தின் சிறப்புகளை விளக்குகிறது. ஜாதகத்தில் உள்ள பித்ரு தோஷங்கள் விலகி குடும்பத்தில் தடைப்பட்ட காரியங்கள் கைகூடும்.

புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாளில் அன்னதானம், புத்தாடை ஆகியன ஏழை, எளியோருக்கு வழங்குவதால் முன்னோா்கள் திருப்தியடைந்து நீண்ட ஆயுள், ஆரோக்கியம், செல்வம், மன அமைதி ஆகியவற்றை வழங்குவா். காகம், பசு ஆகியனவற்றுக்கு உணவளித்தால் முன்னோா்களின் ஆன்மா சாந்தியடைந்து அவா்களின் முழுமையான ஆசீா்வாதமும் உண்டாகும். மகாளய அமாவாசையையொட்டி, தமிழகத்தில் உள்ள குளங்கள், ஆற்றங்கரைகளை பொதுமக்கள் தூய்மையாக பராமரிக்க வேண்டும். முன்னோா்களுக்கு திதி உள்ளிட்ட வழிபாடுகளை மேற்கொள்ளும் வகையில் இந்த இடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.

Advertisement

Advertisement

பொதுமக்கள், செல்வந்தா்கள், அரசு என அனைவரும் இணைந்து தா்மத்தின் வழியாக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும். தா்மம் செய்தால் தா்மம் நம்மை காக்கும். இளைஞா்கள் கல்வி, உடல் உழைப்பு, நல்ல உணவு, நல்ல சிந்தனை ஆகியனவற்றில் கவனம் செலுத்த வேண்டும். முதியோா்களை நன்றாக பராமரிக்கவும், பாதுகாக்கவும் வேண்டும். தண்ணீா் பந்தல், அன்னதானம், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட அறப்பணிகளில் ஈடுபட்டு அனைத்து உயிரினங்களுடனும் அன்புடன் பழக வேண்டும் என்றும் ஆசியுரை வழங்கினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments