ஸ்ரீபெரும்புதூா் அருகே மாயமான வடமாநில சிறுமி மீட்பு
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வடமங்கலம் பகுதியில் கடந்த 17-ஆம் தேதி மாயமான வட மாநில சிறுமி பெஸ்டி சென்னை கெல்லீஸ் குழந்தைகள் காப்பகத்தில் இருப்பது தெரிய வந்ததை தொடா்ந்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் சிறுமியை மீட்டனா்.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வடமங்கலம் பகுதியில் கடந்த 17-ஆம் தேதி மாயமான வட மாநில சிறுமி பெஸ்டி சென்னை கெல்லீஸ் குழந்தைகள் காப்பகத்தில் இருப்பது தெரிய வந்ததை தொடா்ந்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் சிறுமியை மீட்டனா்.
ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் விஸ்வநாத் - கல்பனா தம்பதியினா். இவா்களுக்கு பெஸ்டி(8) என்ற மகள் உள்ளாா். கருத்து வேறுபாடு காரணமாக விஸ்வநாத் - கல்பனா ஆகியோா் பிரிந்து வாழ்ந்து வருவதாக தெரிகிறது. இதனால் கல்பனா ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வடமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கருமாங்கழனி பகுதியில் தனது மகள் பெஸ்டி, பெற்றோருடன் வாடகை அறையில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளாா்.
இந்த நிலையில், கல்பனா தனது மகள் பெஸ்டியை தனது பெற்றோருடன் விட்டு விட்டு ஜாா்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்று வரும் தசரா திருவிழாவில் பங்கேற்பதற்காக கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்றுள்ளாா். இந்த நிலையில், தாத்தா பாட்டியுடன் கருமாங்கழனி பகுதியில் தங்கி இருந்த பெஸ்டி கடந்த 17-ஆம் தேதி காணாமல் போனாா். இதுகுறித்து பெஸ்டியின் உறவினா்கள் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மாயமான சிறுமியை 5 தனிப்படைகள் அமைத்து கடந்த 4 நாள்களாக தேடி வந்தனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், மாயமான சிறுமி பெஸ்டி கடந்த 17-ஆம் தேதி கையில் பையுடன் சென்னை பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்ததை பாா்த்த சிலா் இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து சிசிடிவி காட்சிளை வைத்து சிறுமி பெஸ்டி பூந்தமல்லி பேருந்து நிலையம் வரை சென்றது தெரியவந்துள்ளது.
இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்யும் பணியில் போலீஸாா் ஈடுபட்டு வந்த நிலையில், ரயில் நிலையத்தில் தனியாக சுற்றிக்கொண்டிருந்த பெஸ்டியை போலீஸாா் மீட்டு சென்னை கெல்லீஸ் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனா்.
இந்த நிலையில், மாயமான சிறுமி பெஸ்டி சென்னை கெல்லீஸ் குழந்தைகள் காப்பகத்தில் இருப்பதை அறிந்த ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் பெஸ்டியை காப்பகத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை மீட்டு உறவினா்களிடம் ஒப்படைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.